தமிழகத்தில் தினசரி கொரோனா நோயின் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டிக்கொண்டு இருக்கின்றது . கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் குழந்தைகளையும் விட்டுவைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 வயதுக்கு உற்பட்ட குழந்தைகளிடம் இந்த மூன்றாம் ஆலையின் தாக்கம் பெரும் அளவில் இருக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் வேளையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் (12 வயதுக்கு உற்பட்டவர்கள் ) கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். அனைத்திற்கும் மேலாக தற்பொழுது மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது கருப்பு பூஞ்சை நோய் பரவல் .
மருத்துவ ஆய்வுகளின்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு கூட கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. சர்க்கரை நோய், அதிகளவில் ஸ்டீராய்டு எடுத்துக்கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் கொரோனா நோயாளிகளை கருப்பு பூஞ்சை நோய் தற்பொழுது எளிதில் தாக்கி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உலகமே கொரோனா , கருப்பு பூஞ்சை உள்ளிட்ட கொடிய நோய்களின் அச்சத்தில் மூழ்கிவரும் நிலையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள மூன்று மலை ஊராட்சிகளை சேர்ந்த 70 -க்கும் மேற்பட்ட மலைக்கிராமத்தில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா நோய் தொற்றின் அறிகுறி இல்லாதது பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது .
வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நாள்தோறும் நோய் தொற்றுக்கு புதியதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 750-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிஞ்சமந்தை, ஜார்த்தான்கொல்லை , பலாம்பட்டு , ஆகிய மூன்று மலை ஊராட்சிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மலைகளின் மேலே 70 சிறிய கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலங்களில் தங்கி விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர், மீதம் உள்ள மலைவாழ் மக்கள் தங்களது சொந்த கிராமங்களில் ஆடு மாடு மேய்த்தல் , விவசாயக் கூலி , தேன் எடுத்தல், விறகு வெட்டுதல் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அணைக்கட்டு தாலுக்காவில் நாள்தோறும் 40க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் , இந்த மூன்று ஊரட்ச்சிகளில் உள்ள 70 மலை கிராமங்களில் , மருத்துவ பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த மலை கிராம மக்கள் ஒருவர் கூட அநாவசியமாக மலையை விட்டு கீழே இறங்குவதில்லை. முன்னதாக இவர்கள் வாரம் ஒரு முறை நடக்கும் வார சந்தைக்கு காய்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் கீழே இறங்கி வருவர்.
ஆனால் தற்பொழுது கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக அணைத்து வார சந்தைகளும் மூடப்பட்டுள்ளதால். இவர்கள் ஒடுக்கத்தூர் இல் இருக்கும் சிறு கடைகளிலே தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி கொண்டு மலைகளுக்கு மீண்டும் திரும்பி சென்று விடுகின்றனர். இவர்கள் இதுவரை கொரோனா தொற்று உள்ளவர்களோடு எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கின்றனர்.
இது குறித்து ஒடுகத்தூர் வட்டார மருத்துவ அதிகாரி கைலாசம் நம்மிடம் பேசியபொழுது, மலையில் வசிக்கும் மக்கள் பொதுவாகவே கடினமாக உழைக்க கூடியவர்கள் . அது மட்டும் அல்லாமல் ஆரோக்யமான இயற்கை உணுவுகளை உண்டு, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உடையவர்கள் . இயற்கையான சூழ்நிலையை தழுவி இவர்களது வாழ்வியல் உள்ளதால் தொற்று எளிதில் இவர்களுக்கு பரவாது. சென்ற ஆண்டு இந்த மலைக்கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து கொரோனா ஊரடங்குக்காக தனது சொந்த மலை கிராமத்திற்கு வந்திருந்தபொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்திலே குணம் அடைந்து சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார் .
அதேபோல் சென்ற ஆண்டு 1000-க்கும் மேற்பட்ட இந்த மலைக்கிராமவாசிகள் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய பொழுது அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது , அப்பொழுது கூட இந்த மலை கிராமங்களை சேர்ந்த ஒருவர் கூட நோய் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம், இதுவரை யாரும் கொரோனா நோயால் பாதிக்கப்படவில்லை என்றாலும், நோய் பரவலை தடுக்க மிக எச்சரிக்கையாக இருத்தல் மிக அவசியம் என்று கூறினார் வட்டார மருத்துவ அலுவலர் கைலாசம்.
ABP செய்தி குழுமம் பெரியதட்டான்குட்டை மலை கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (29) என்பவரை தொடர்புகொண்டபொழுது, இங்கு இருக்கும் அணைத்து மலைக்கிராமங்களும் சமவெளி பகுதியாக கருதப்படும் அணைக்கட்டில் இருந்து குறைந்தது 15 கிலோமீட்டர் தூரத்தில் மலைகளின் மேல் அமைந்துள்ளது. நாங்கள் அத்தியாவசிய தேவை இன்றி மலையில் இருந்து கீழே இறங்கமாட்டோம். ஒருவேளை அவசரத் தேவைகளுக்கு அணைக்கட்டு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றாலும் கட்டாயம் முகக்கவசம் அணிதல் , சமூக இடைவெளி உள்ளிட்ட வழிகாட்டல்களை கண்டிப்பாக பின்பற்றுவோம். இதனால்தான் இதுவரை எங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் இங்கு உள்ள பெரும்பான்மையான மலை கிராமங்களுக்கு சாலை, குடிநீர், மருத்துவமனை , பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் முழுமையாக பூர்த்திசெய்யப்படவில்லை என்று தெரிவித்த விஜயகுமார். மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இதில் உடனடியாக தலையிட்டு எங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்து , மலைவாழ் மக்களுக்கு போதுமான வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தி எங்களது வழக்கை தரத்தை மேம்படுத்த தேவையான உதவிகளை செய்துதர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் .