தமிழக சட்டசபையில் 2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். அப்போது வேளாண்மை மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.38 ஆயிரத்து 904 கோடியே 46 லட்சத்து 6 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் மண் வளம் குறித்து அறிந்து கொள்வதற்காக தமிழ் மண் வளம் என்ற தனி இணைய முகப்பு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ஒரு டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்தித் தரப்படும். ரூ. 300 கோடி மதிப்பில் கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்வர் தலைமையில் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் சிறு தானியத் திருவிழா நடத்தப்படும். தமிழ்நாட்டில் மரம் வளர்க்கும் திட்டத்திற்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.




மேலும் சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், உற்பத்தியாளர் குழுக்கள், சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க 30.56 கோடி ஒதுக்கீடு. தமிழகத்தில் இரண்டு சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டங்களுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 381 கோடி ரூபாய் செலவில், திண்டிவனம், தேனி, மணப்பாறையில் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம்பெற்று உள்ளது.


இந்நிலையில் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் அய்யாக்கண்ணு கூறியது.. 


தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வழங்குவதாக உறுதி அளித்த நெல்லுக்கான ஆதார விலை ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் கரும்புக்கான ஆதார விலையை ரூ.4 ஆயிரமாக பட்ஜெட்டில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் அதுகுறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றார். மேலும் விவசாயிகள் எதிர்பார்த்த எந்த அறிவிப்பும், இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக தனிநபர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டங்களை அமல்படுத்த வேண்டும். வெள்ள காலங்களில்  பாதிக்கப்படக்கூடிய விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.  ஆனால் இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்புகள் எதுவுமே இல்லை என்பது விவசாயிகளை ஏமாற்றி உள்ளது. ஆனால் இந்த நிதிகள் அனைத்தும் அரசு அதிகாரிகளுக்கு ம்ட்டுமே சென்றடையும், தவிர  விவசாயிகளுக்கு எதுவும் சென்றடையாது. ஆகையால் முழுக்க முழுக்க தமிழ்நாடு வேளாண் துறை பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றி உள்ளது என தெரிவித்தார்.