மலேசியா நாட்டிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, தென் அமெரிக்கா வனப்பகுதியில் காணப்படும் "மர்மோசெட்" எனப்படும் 4 அரியவகை  குரங்குகளை, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்ததோடு, 4  அரிய வகை குரங்குகளும், மலேசிய நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

 

அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல்

 

தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவு, வெளிநாட்டு வன உயிரினங்கள், சென்னைக்கு கடத்தி வருவதாக, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்துக்  கொண்டு இருந்தனர்.

 



இருவர் மீது சந்தேகம்

 

இந்த நிலையில் மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு வந்தது. அதில் வந்த பயணிகளை மதிய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்காணித்த போது, சென்னையைச் சேர்ந்த வினோத் (28),விக்னேஷ் (34) ஆகிய இரண்டு பயணிகள் பிளாஸ்டிக் கூடைகளுடன் வந்தனர். இவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம்  ஏற்பட்டது.

 

மர்மமோசெட் குரங்குகள்

 

இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இருவரையும் நிறுத்தி விசாரித்தனர். இவர்கள் இருவரும் சுற்றுலா பயணிகளாக, மலேசியா நாட்டிற்கு சென்று விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்தனர். அவர்களை விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதை அடுத்து அவர்கள் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளை திறந்து பார்த்து சோதனையிட்டனர்.  இரண்டு பேரின் பிளாஸ்டிக் கூடைகளுக்குள்ளும் "மர்மமோசெட்" எனப்படும் தென் அமெரிக்க வனப்பகுதியில் அதிகமாக காணப்படும் அபூர்வ வகை வெளிநாட்டு குரங்குகள் 4, இருப்பதை கண்டுபிடித்தனர்.

 

அனுமதி இல்லாமல் கொண்டுவரப்பட்டது

 

இதையடுத்து இரண்டு பேரையும் வெளியில் போக விடாமல் நிறுத்தி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த அபூர்வ வகை வெளிநாட்டு குரங்குகள், முறையான அனுமதி இன்றி, சட்ட விரோதமாக இந்தியாவுக்கு கடத்திக் கொண்டு வரப்பட்டு இருப்பது தெரிய வந்தது. முறையான மருத்துவ பரிசோதனை இல்லாமல் கொண்டுவரப்பட்டுள்ளதால், இந்த  குரங்குகள் மூலம் வெளிநாட்டு நோய் கிருமிகள், இந்தியாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. இதை அடுத்து இரண்டு பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு துறை கைது செய்தனர். 4  அரிய வகை குரங்குகளையும் பறிமுதல் செய்தனர். அதோடு அரிய வகை குரங்குகளையும், கடத்தல் ஆசாமிகளையும், சென்னை விமான நிலைய சுங்க துறையிடம் ஒப்படைத்து, மேல் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டனர்.

 

திருப்பி அனுப்பப்பட்ட குரங்குகள்

 

சுங்க அதிகாரிகள் இந்த அரிய வகை குரங்குகளை இந்தியாவிற்குள் அனுமதிக்க மறுத்து, கடத்தி வரப்பட்ட மலேசிய நாட்டுக்கு, எந்த விமானத்தில் வந்ததோ, அதே விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்தனர். அதற்கான செலவுகளை கடத்தல் ஆசாமிகளிடம் வசூல் செய்ய முடிவு செய்தனர். இதை அடுத்து இன்று இரவு இந்த 4 குரங்குகளும்  மலேசிய நாட்டுக்கு திரும்பி அனுப்பப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடமும் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்படும் தங்கம், வைரம் போன்றவை மட்டுமின்றி இதுபோன்ற அரியவகை குரங்குகள், கடல் ஆமைகள் உள்ளிட்ட பலவும் அடிக்கடி  அதிகாரிகளுக்கு பெரும் தலைவியாக அமைந்துள்ளது.