அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 1000 தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டப்படும் என்றும், மீன்வளத்துறைக்கு ரூ.1,149.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட் உரையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


தமிழ்நாடு அரசின் 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். சட்டமன்ற வரலாற்றில் கலைவாணர் அரங்கில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரை தொடங்கியது.  


பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார். அந்த உரையில், “2021 - 22 ஆம் ஆண்டிற்காக மாநில பேரிடர் மேலாண்மைக்கு 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ள 1,360 கோடி ரூபாய் போதுமானதாக இல்லை. இந்தியாவில் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும். மீன்வளத்துறைக்கு ரூ.1,149.79 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடல்பாசி வளர்ப்பு, கூண்டுகளில் மீன் வளர்ப்பு போன்ற மாற்று வாழ்வாதார திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். தரங்கம்பாடி, திருவொற்றியூர், ஆற்காட்டுத்துறை மீன்பிடித்துறைமுகத் திட்டப்பணி விரைந்து முடிக்கப்படும். புதிதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க ரூ.6.25 கோடியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். மாநிலத்தில் ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்த ‘தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்’ ஏற்படுத்தப்படும். ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும். ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும். காசிமேடு மீன்பிடித்துதுறைமுக மேம்பாட்டிற்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 79,395 குக்கிராமங்களில் நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும். 1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழிவகை செய்யப்படும். ஜல்ஜீவன் இயக்கத்தை செயல்படுத்த ரூ.2000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் 1000 தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டப்படும். ஆனைமலையாறு ,நீராறு -  நல்லாறு, பாண்டியாறு - புனம்புழா திட்டத்திற்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.






இந்த இ-பட்ஜெட்டை, கணினி திரை, கையடக்க டேப்(Tab) மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து வருகின்றனர். இதனை இயக்கும் பயிற்சிகள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு முன்னரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அரசு நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் வெளியிட்டிருந்தார். இதற்கிடையேதான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


பட்ஜெட் உரை தொடங்குவதற்கு முன்பு, பேச வாய்ப்பு கேட்ட அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர்.


கொரோனா பெருந்தொற்று பேரிடருக்கு நடுவே தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் கொரோனா முதல் அலை பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதனால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கும் உற்பத்தி பாதிப்புகள், வேலைவாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் என பல்வேறு சிக்கல்களுக்கு இந்த பட்ஜெட் மூலம் தீர்வு கிடைக்குமா என மக்கள் புருவம் உயர்த்திக் காத்திருக்கின்றனர். 


நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் செப்டம்டர் 21ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெற உள்ளது.


TN Budget 2021 Live Updates: பட்ஜெட்: காவல்துறை... தீயணைப்புத்துறை.. மீன்வளத்துறை... பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்ட நிதி இதோ!