தமிழ்நாடு அரசின் 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். சட்டமன்ற வரலாற்றில் கலைவாணர் அரங்கில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரை தொடங்கியது.  


பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார். அந்த உரையில், “1921ஆம் ஆண்டு முதலான சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் கணினிமயமாக்கப்படும். தலைமைச் செயலகம் வரை அனைத்து துறை அலுவலகங்களும் தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும். உலகளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு  மொழிகளில், மொழி பெயர்க்கப்படும். கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருதும், ரூ.10 லட்சம்  இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன்  3ஆம் தேதி வழங்கப்படும். தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி துறைக்கு ரூ.80.26 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.


கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை பகுதிகளில் நடைபெறும் ஆய்வுகள் தமிழர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும். தேசிய கடற்சார் நிறுவனம் உதவியுடன், சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்த இடங்களில் கடல் ஆய்வுகள் நடத்தப்படும். அரசு இடங்களை அடையாளம் காண ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நவீன ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.







இந்த இ-பட்ஜெட்டை, கணினி திரை, கையடக்க டேப்(Tab) மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து வருகின்றனர். இதனை இயக்கும் பயிற்சிகள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் என சபாநாயகர் அப்பாவு முன்னரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அண்மையில் அரசு நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் வெளியிட்டிருந்தார். இதற்கிடையேதான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகுமா என்று மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.




பட்ஜெட் உரை தொடங்குவதற்கு முன்பு, பேச வாய்ப்பு கேட்ட அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர்.


கொரோனா பெருந்தொற்று பேரிடருக்கு நடுவே தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் கொரோனா முதல் அலை பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதனால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கும் உற்பத்தி பாதிப்புகள், வேலைவாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் என பல்வேறு சிக்கல்களுக்கு இந்த பட்ஜெட் மூலம் தீர்வு கிடைக்குமா என மக்கள் புருவம் உயர்த்திக் காத்திருக்கின்றனர். 


நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் செப்டம்டர் 21-ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெற உள்ளது.


TN Budget 2021 Live Updates: கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு: பிடிஆர் பட்ஜெட் உரை!