கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 7,19,895 பேர் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளதாக உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு குடும்பத்திற்கு ரேஷன் கார்டுகள் மிக முக்கியமானதாக இருக்கிறது. இதன் மூலம் அரசின் பல சலுகைகள் அவர்களுக்கு கிடைக்கிறது. கொரோனா நிவாரண நிதி முதல் அரசின் பல்வேறு திட்டங்களை சலுகைகளை பெறுவதற்கு ரேஷன் கார்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ரேஷன் கார்டை பெறுவதற்கு கடினமாக இருந்த நிலையில், விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் புதிய உத்தரவை ஒன்றை பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோர்கள் விவரம் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக உணவு வழங்கல் துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 7,19,895 பேர் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர். மே மாதத்தில் 1,26,414 பேர், ஜூன் மாதத்தில் 1,57,497 பேர், ஜூலை மாதத்தில் 2,61,529 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தென் சென்னையில் 49920 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 17728 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 6073 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 15687 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 2041 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருகிறது.
வட சென்னையில் 41431 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 16608 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 5312 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில், 15054 பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 1554 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் 43,647 பேர் விண்ணப்பித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் 38,295 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 15687 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 2041 பேருக்கு ரேஷன் கார்டு அச்சிடும் பணி நடைப்பெற்று வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மாதம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இணையவழியில் புகார் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதால் புகார் பதிவேடு முறையை கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் அவற்றில் உள்ள சிரமங்களை இணையவழியில் தெரிவிப்பதில் சிரமங்கள் உள்ளதாக ஆய்வுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நியாய விலைக்கடைகளில் புகார் பதிவேடு முறை அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணைய வழி புகார் தெரிவிக்கும் நடைமுறையும் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புகார் பதிவேட்டு முறையை உடனடியாக அமல்படுத்த நுகர்பொருள் வழங்கல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த புகார் பதிவேடு முறையால் புகாரை உடனே தெரிவிக்கவும், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற