தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி மீது பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். அதிலும் குறிப்பாக பிஜிஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்தது தொடர்பாக பல முறைக்கேடு நடைபெற்று வருவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். 


இந்நிலையில் தற்போது பிஜிஆர் நிறுவனத்திற்கு எண்ணூர் அனல்மின் நிலையத்தின் விரிவாக்க பணியை கொடுத்ததில் முறைக்கேடு நடைபெற்றுள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “எண்ணூர் அனல்மின் நிலையத்தில் 660 மெகாவாட் விரிவாக்க பணிகளுக்கு பிஜிஆர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் அந்த ஒப்பந்தத்தை கடந்த 26.04.2021 அன்று தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்துள்ளது. 






ஆனால் அந்த ஒப்பந்தத்தை திமுக தலைமையிலான அரசு 29.10.2021ஆம் ஆண்டு பதவியேற்ற பிறகு நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை மீண்டும் திரும்பி தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் முதலமைச்சர் சொன்னது தானா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். 


முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத் துறையில் ஊழலை மேற்கொண்டதாக அண்ணாமலை கடந்த சில மாதங்களுக்கு முன்னால் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு செந்தில் பாலாஜியும் கடுமையான வார்த்தைகளால் பதில் கூறியிருந்தார். இதனால் அப்போதே ட்விட்டரில் வார்த்தைப் போர் வெடித்தது. 


இந்த சூழலில், மதுரையில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, ”தமிழக மின்சார வாரியத்தின் ரூ.4,442 கோடி மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தம், அனைத்து விதிகளையும் மீறி பி.ஜி.ஆர். என்னும் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி பிஜிஆர் நிறுவனத்தின் ஊழியர் போல் பேசுகிறார். பிஜிஆர் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.


ஊழல் செய்ய ஆரம்பிக்கும் போது அதை தட்டிக்கேட்டால் சிறைக்கு அனுப்புவோம் என்றால் தயவு செய்து அனுப்புங்கள். சந்தோஷமாக சிறைக்கு சென்று, திரும்பி வந்ததும் திமுக அரசின் ஒவ்வொரு ஊழல்களையும் வெளிப்படுத்துவேன். திமுக மட்டும் ஆட்சியில் இல்லை. பாஜகவும் ஆட்சியில் உள்ளது என்பதையும் திமுகவுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று காட்டமாக விமர்சித்தார்.


இதற்கு டிவிட்டரில் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ”பி.ஜி.ஆர். நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019. டெண்டர் கொடுத்த ஆட்சி அதிமுக. வாழ்ந்த 13700+  சொச்ச நாட்களில் 20000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக் கோளாறுகளுக்கு புரிதல் வேண்டும் அல்லது புரிந்துகொள்ளப் பக்குவம் வேண்டும். அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை” என்று பதிலடி கொடுத்திருந்தார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண