போராட்டம் நாளை தொடர்ந்து நடைபெற்றாலும் 60 % அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தொழிற்சங்க கூட்டமைப்பு பொருளாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். இன்று காலை முதல் தமிழ்நாட்டில் காலை 8 மணி நிலவரப்படி 67 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும், 33 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல், சென்னையில் 10 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது எனவும், மீதம் 90 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை என்றும் தெரிகிறது. சென்னையில் மொத்தம் 3, 175 பேருந்துகள் தினசரி இயங்கிவந்த நிலையில், இன்று வெறும் 318 பேருந்துகள் மட்டுமே இயங்கி வருவதாக தமிழக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்திருந்தது. 


அதேபோல், விழுப்புரம் கோட்டத்தில் 27.82 சதவீதமும், சேலம் கோட்டத்தில் 37. 94 சதவீதமும், கோவை கோட்டத்தில் 21.56 சதவீத பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகின்றன. 






முன்னதாக, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும், முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கக்கூடாது, விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் உரிமைகளை தட்டிப் பறிக்கக் கூடாது, மேலும் மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்த பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29,தேதிகளில் போராட்டம் நடத்தபப்டும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இந்த போராட்டத்திற்கு மாநில தொழிற்சங்கங்களிடம் ஆதரவு கோரியிருந்தன.



இதனையடுத்து, மார்ச் 28 (இன்று) நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம், கூட்டுறவுத்துறை, நீதித்துறை, தொழில் பயிற்சி அலுவலர்கள் சங்கம், பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் சங்கம், உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், சுகாதார ஆய்வாளர்கள் சங்கம், அனைத்து மருந்தாளுநர்கள் சங்கம், சுகாதார போக்குவரத்து துறை ஊழியர் சங்கம், நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம், கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்டு 70க்கும் மேற்பட்ட சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது.









மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண