Annamalai: முதலமைச்சருக்கு என்ன சர்வாதிகாரி என்ற நினைப்பா? என்றும், அமைச்சர் கீதா ஜீவனுக்கு என்ன மகாராணி என்ற நினைப்பா? என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார். 


கீதா ஜீவன்:


தமிழ்நாடு அமைச்சரவையில், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சராக இருப்பவர் கீதா ஜீவன். இவர் திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்துக்கு செல்லவுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர், பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி மாவட்ட வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் மானூர் ஒன்றியத் தலைவர் சுப்புதுரை ஆகியோரை கைது செய்துள்ளனர்.






இதனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில், திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் வரவுள்ளதால், முன்னெச்சரிக்கை என்ற பெயரில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின், திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் தயா சங்கர், மானூர் ஒன்றியத் தலைவர் சுப்புதுரை ஆகியோரை இன்று (26/12/2022) அதிகாலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


அண்ணாமலை விமர்சனம்:


அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா? உங்கள் அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள் என ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார். 






அண்மையில், தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடியில் முன்னாள் எம்.பி மற்றும் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு மற்றும் கார் தாக்கப்பட்டதில் தூத்துக்குடி மாநகராட்சி தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.