தமிழக அரசின் நிதியமைச்சராக பொறுப்பு வகிப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். அவர் இன்று காலை தி.மு.க.வின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவனை மிகவும் கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டார். தனது கட்சியின் மூத்த தலைவரையே ஒரு அமைச்சர் இவ்வாறு விமர்சித்திருப்பது தி.மு.க.வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பலரும் பழனிவேல் தியாகராஜனின் அந்த டுவிட்டருக்கு கீழ் கலவையான பல விமர்சனங்களை கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் டுவிட்டின் புகைப்படத்தை பதிவிட்டு,” தமிழ்நாடு நிதியமைச்சராக பொறுப்பு வகிப்பவர் தனது தினசரி வேலையைச் செய்வதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும் தெளிவான மற்றும் நிலையான மனநிலையை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் முதல்வர் நிதியமைச்சருடன் பணிபுரிபவர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடாது. தமிழ்நாட்டில் நிதிநிலைமைக்கு ஆபத்து. அதற்கு இது ஒரு சான்று” என்று பதிவிட்டுள்ளார். மேலும், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அந்த டுவிட்டை அழித்ததை சுட்டிக்காட்டும் விதமாக நீக்கப்பட்டது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்விக்கு அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதுதொடர்பாக, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த தி.மு.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் அனுபவம் குறைவு என்றும், அவரை கட்சித் தலைமை கண்டிக்கும் என்றும் கூறியிருந்தார்.
அவரது பேச்சை கண்டு கடும் கோபமடைந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், கட்சியின் இரண்டு முக்கிய தலைவர்களால், இரண்டு முறை கட்சி பொறுப்பு பறிக்கப்பட்ட வயதான முட்டாள் என்றும், இரண்டு கிலோ இறால் கொடுத்து வாங்கும் அளவிற்குதான் அவர் தகுதியானவர் என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் இந்த பதிவு தி.மு.க. தொண்டர்கள் முதல் தலைமை வரை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதாலும், பலரும் கடுமையான விமர்சனங்களையும், கேள்விகளையும் முன்வைத்ததாலும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இந்த பதிவை உடனடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார். ஒரு மாநிலத்தின் நிதியமைச்சர் தனது கட்சியின் மூத்த தலைவரை இவ்வாறு தரக்குறைவாக பேசியிருப்பது பலருக்கும் தி.மு.க.வினர் மட்டுமின்றி கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு, அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.