தமிழ்நாட்டில் 2000 ரூபாய் நோட்டுகள் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டும் என பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தி.மு.க.வினர் குறித்தும் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்ணாமலை கடிதம்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் “நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சியிலும், ரிசர்வ் வங்கியின் தூய்மையான நோட்டுக் கொள்கையின்படியும், 2023 செப்டம்பர் 30 வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது தொடர்பான இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தமிழக மக்கள் முழு மனதுடன் வரவேற்றனர். 2000 ரூபாய் நோட்டுகள் 30 செப்டம்பர் 2023க்குப் பிறகும் செல்லுபடியாகும், மேலும் 2017-18 ஆம் ஆண்டின் இறுதியுடன் ஒப்பிடும்போது 2022-23 ஆம் ஆண்டின் இறுதியில் 2000 ரூபாய் நோட்டின் புழக்கம் பாதியாகக் குறைந்துள்ளது என்பதை ரிசர்வ் வங்கி சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
நமது பிரதமர் நரேந்திர மோடியின் ஒவ்வொரு முடிவும் துல்லியமான திட்டமிடல் மற்றும் விவரங்களுடன் ஆதரிக்கப்படுகிறது, மேலும் நாடு முழுவதும் உள்ள மக்கள் இதையே ஒப்புக்கொள்கிறார்கள், ஏனெனில் இந்த முடிவுகள் எப்போதும் நம் நாட்டின் சாமானிய மக்களின் நலன்களுக்காகவே இருக்கும். உங்களுக்குத் தெரியும், திமுக அரசியல்வாதிகள் ஊழல் மற்றும் பணமோசடிக்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதில் பெயர் பெற்றவர்கள். தமிழக அரசின் மூத்த அமைச்சர் ஒருவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் & மருமகன் ஊழல் மூலம் ஓராண்டில் 30,000 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளதாக பேசியுள்ளார்.
திமுக அரசியல்வாதிகள் தங்கள் வசம் உள்ள அரசு இயந்திரங்களை, குறிப்பாக கூட்டுறவு சங்கங்கள்/சங்கம் மற்றும் டாஸ்மாக் ஆகியவை மூலம், தங்கள் முறைகேடாக சம்பாதித்த 2000 ரூபாயை மாற்றிக்கொள்ள பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள் மூலம் தமிழகத்தில் நடைபெறும் 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனையை, வங்கிகள் கண்காணிக்க நிதி அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
திரும்பப் பெறப்படும் 2000 ரூபாய் நோட்டுகள்:
நாடு முழுவதும் ரூபாய் 2 ஆயிரம் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும், வரும் 23ம் தேதி முதல் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்த சூழலில் தான், அண்ணாமலை மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு பொதுமக்களை பெரும் பாதிப்பிற்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.