தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக புகார் ஒன்றை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதன் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியரசு தலைவர் மாளிகையில் சமர்பித்துள்ளனர்.


இந்நிலையில், திமுகவின் செய்தி தொடர்பு செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன், நமது ஏபிபி நாடுவிற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அப்போது, தமிழ்நாடு ஆளுவருக்கு எதிராக குடியரசு தலைவரிடம் புகார் அளித்தது ஏன்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதில் அளித்த அவர், "தமிழ்நாடு ஆளுநர் குறித்த ஒரு புகாரை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு குடியரசு தலைவரிடம் வழங்க உள்ளார்கள். அதற்கு காரணம், தமிழ்நாடு ஆளுநர், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் கையிலேயே வைத்துள்ளார். காரணம் என்ன என்றும் சொல்ல மறுக்கிறார்.


 



மாநில சட்டப்பேரவை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவை. இங்கு இயற்கப்படும் தீர்மானங்களை, சட்டங்களை ஆளுநர் ஏற்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. அவர், தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் என்பது ஒரு குற்றச்சாட்டு. அதுமட்டும் இல்லாமல், பொதுவெளி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்துகளை, அரசியல்வாதி போல பேசுகிறார். மத அமைப்பின் சார்பாக பேசுகிறார்" என்றார்.


உயர் வகுப்பினுருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக திமுக மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


அதற்கு பதிலளித்த அவர், "வரலாற்று ரீதியாக கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும்தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, பொருளாதார ரீதியாக வழங்கினால், சமூக ரீதியாக கல்வி ரீதியாக பின்தங்கியவர்களின் இட ஒதுக்கீடு குறையும். எனவே, தான் மேல்முறையீடு செய்ய போகிறோம். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.


காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கூட்டணி கட்சிகள், தீர்ப்பை வரவேற்றுள்ளதே என கேள்வி எழுப்பியதற்கு, "எங்களுடைய நிலைபாட்டை அவர்களுக்கு விளக்கவோம். அவர்களுக்கு புரிய வைப்போம்" என்றார்.


இந்த தீர்ப்பு குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 12ஆம் தேதி தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. 


தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,  "பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு “சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு" என்று கழகத் தலைவரும்,  தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்றைய நாள் அறிக்கை வெளியிட்டிருந்தார்.


இந்த இடஒதுக்கீடு வழக்கினை விசாரித்த அமர்வில் இருந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித் “செல்லும் என்று அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல்” நீதிபதி ரவீந்திர பட் அதிருப்தி தீர்ப்போடு ஒத்திசைவதாகத் தெரிவித்துள்ள நிலையில், வழக்கமான நடைமுறைப்படி ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.