Pon.Manickavel:  சிலை கடத்தல் விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டுகள் தவறு என முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.


சிலை கடத்தல் புகார்


தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிலை மாயமாவதாக வரும் புகார்களை பொதுவாக சிலை கடத்தல் பிரிவு அதிகாரிகள் தான் விசாரணை செய்வார்கள். இதனிடையே பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை சர்வதேச கடத்தல்காரர்களுடன் இணைந்து கடத்தியதாக முன்னாள் திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி காதர் பாஷா மீது புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் காதர் பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குற்றவாளியை தப்பிக்க வைக்க தான் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காதர் பாஷா வழக்கு தொடர்ந்தார்.


பழவலூர் சிலை கடத்தல் வழக்கு


பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக அவருடன் கூட்டுச் சேர்ந்ததாகவும், தன்னை பழிவாங்கும் நோக்கிலும் அப்போது இருந்த சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி.பொன். மாணிக்கவேல் தன் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததாக கூறியுள்ளார். இதில் சிபிசிஐடி வழக்குப்பதிவு  செய்து விசாரணை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து பொன்.மாணிக்கவேல் மேல்முறையீடு செய்திருந்தார்.


பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு


இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிபிஐ பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்தது. காதர் பாஷா கொடுத்த புகாரின் அடிப்படையிலும், உயர்நீதிமன்றம் உத்தரவின்படியும்  விசாரணை நடத்திய சிபிஐ, பொன்.மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு  செய்தது. பழவலூர் கோயில் சிலை உட்பட 13 சிலைகள் திருடப்பட்ட வழக்கு விசாரணையில் முறைகேடு நடந்ததாக கூறி அவர் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.


”என் மீதான குற்றச்சாட்டுகள் தவறு”


இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது, ” சிலை கடத்தல் விவகாரத்தில் என் பெயர் குற்றவாளிகள் பட்டியலில் இல்லை எனவும் என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் தெரிவித்தார்.









மேலும் குற்றம் சாட்டப்பட்ட தீனதயாளன் வீட்டில் பல பொருட்கள் உள்ளன என தெரிவித்தார். பின்பு பழவலூர் சிலை கடத்தல் விவகாரத்தில் என் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது என்பது தவறானது என முன்னாள் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்.