சென்னையில் வெள்ள பாதிப்புகளை கட்டப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கும் நிலையில் வழக்கத்தை விட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இதே பகுதிகளில் உருவாகி, 9 மற்றும் 11 தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு பரவலாக கனமழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாளை இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வால்டாக் சாலையில் இருக்கக்கூடிய குடியிருப்புகளுக்கான இலவச மருத்துவ முகாமை இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா ராஜன் பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பாக அடுத்த சில நாட்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ள நிலையில் வெள்ள நீர் தேங்க கூடிய தாழ்வான இடங்களை கண்டறிந்து கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரபட்டதாகவும் எனவே வெள்ள பாதிப்பு ஏற்படுவதை கட்டுப்படுத்த அனைத்து பணிகளும் முடித்து விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
புயலே வந்தாலும் சென்னையில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரியா குறிப்பிட்டார்.