திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு ஏ.டி.எம்.களில் 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சம்பவத்தில் வட இந்தியர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணையில் குற்றவாளிகள் ஹரியானாவில் இருப்பதாகவும், திருவண்ணாமலை ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த 6 பேரை ஹரியானாவிற்கே சென்று தமிழ்நாடு போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியானது.  ஆனால், இதுதொடர்பாக விளக்கம் அளித்த திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஏ.டி.எம். கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 


திருவண்ணாமலை கொள்ளை:


கடந்த 11ம் தேதி இரவு திருவண்ணாமலையில் தண்டராம்பட்டு, மாரியம்மன்கோவில் தெரு, போளூர் ரயில் நிலையம் உள்பட 3 இடங்களில் உள்ள ஏ.எடி.எம்.களை வெல்டிங் கேஸ் உதவியுடன் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். ஒரே இரவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டிய இந்த மர்மகும்பலால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ச்சியடைந்தது.


இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வேலூர சரக டி.ஐ.ஜி. மற்றும் நான்கு மாவட்ட எஸ்.பி.க்கள் நேரில் சென்று கொள்ளையடிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தில் ஏ.டி.எம். தொழில்நுட்பம் முழுமையாக தெரிந்த வடமாநில கும்பல் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் 22 ஏ.டி.எம். வைப்புத்தொகையில்  கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டது என்றும் காவல்துறை வடக்கு மண்டல தலைவர் கண்ணன் கூறினார்.


 


குற்றவாளிகளை கைது செய்ய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கி ஏ.டி.எம். அமைந்துள்ள பகுதியில் சி.சி.டி.வி. ஆகியவற்றை ஆராய்ந்து தீவிர விசாரணையிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வடமாநில கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள காவல்துறை குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் அவர்களை கைது செய்துவிடுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கியமான 2 ஹார்ட் டிஸ்க்குகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். நன்றாக தொழில்நுட்பம் தெரிந்த குழுவினர் அலாரத்தை துண்டித்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருப்பதால், பழைய வழக்குகளையும் புலனாய்வு செய்து கொள்ளையர்களை தேடும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர். அதேதினத்தில் சென்னையில் நகைக்கடையை துளையிட்டு 9 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும், 100 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் வடமாநில கும்பல் - வடக்கு மண்டல ஐஜி கண்ணன்


மேலும் படிக்க: Crime: ஒரே இரவில் பல ஏ.டி.எம்.களில் கொள்ளை...! லட்சக்கணக்கில் அபேஸ்..! கதிகலங்கிய திருவண்ணாமலை..!