திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் நான்கு ஏடிஎம் மையங்களை கொள்ளையடித்த சம்பவம் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், ஏடிஎம் தொழில்நுட்பம் முழுமையாக தெரிந்த வடமாநில கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 22 ஏடிஎம் வைப்புத் தொகை எந்திரத்தில் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாகவும், அதே கும்பல் தான் தற்பொழுது இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது எனவும்
தெரியவந்துள்ளது. டிஐஜி தலைமையில் ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 9 தனிப்படை அமைக்கப்பட்டு சில தனிப் படைகள் வெளி மாநிலத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் டிஎஸ்பி அளவிலான விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், தடயவியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், குற்றவாளிகள் ஏடிஎம் எந்திரத்தை எரித்ததற்கான ஆதாரம் கிடைக்கவில்லை எனவும் விசாரணைக்கு தேவையான சிசிடிவி காட்சிகள் முழுமையாக கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
முன்னதாக, இந்த கொள்ளை வழக்கில் ஏடிஎம் மையத்திற்குள் இருந்த 2 ஹார்ட் டிஸ்கை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆய்வு நடத்தினர். இதில், ஹார்ட் டிஸ்கில் இருந்த பதிவுகள் அனைத்தும் தீயில் கருகியதால் எந்தவித பதிவுகள் இல்லை என்பதால் காவல்துறையினர் துப்பு துலக்குவதில் இழுபறி நிலவி வருகிறது.
திருவண்ணாமலை நகரில் 200 சிசிடிவி கேமரா மற்றும் கலசபாக்கம் போளூர், கண்ணமங்கலம், சாலைகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை தற்போது காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
வடமாநில கொள்ளையர்கள் போலி பதிவு எண் கொண்ட டாடா சுமோவில் வந்ததாகவும் எந்த வித டோல்கேட்டிலும் சிக்காமல் கொள்ளையர்கள் சென்றிருப்பதால் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 6 கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை நகரில் அமைக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காவல்துறையில் மற்றும் தனியார் சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை கைப்பற்றியும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பும் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மெக்கானிக் உள்ளிட்டவர்கள் உள்ளிட்ட 20 நபர்களிடம் நகர காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், திருவண்ணாமலையில் தேனிமலை ஏடிஎம்-ல் வேலூரில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் ஸ்பெஷல் டீம் தற்போது கைரேகை தடயங்களை சேகரித்து வருகின்றனர்.ஐந்து பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் போலீசார் ஏடிஎம் அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் வெளி மாணித்தவர்கள் நடமாட்டம் இருந்ததா யாரேனும் முகாமிட்டு இருந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.