கொடிகாத்த குமரன்.. இப்படித்தான் நம்மில் பலருக்கும் திருப்பூர் குமரனைத் தெரியும். பலருக்கு பெயரவளில் தெரியும், பலருக்கு ஏட்டளவில் தெரியும். ஆனால், உணர்வளவில் போற்றப்பட வேண்டிய மாமனிதர் அவர். 


இன்று அவரது நினைவு நாள் கடைப்பிடிக்கப்படும் நிலையில் அவரைப் பற்றி நினைவு கூர்வோமாக. 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் நடந்த விடுதலைப் போராட்டத்தில் தான் குமரன் உயிர் நீத்தார்.


பிறப்பு:


குமரன் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்தார். இவரது இயற்பெயர், குமாரசாமி. இளமையில் வறுமையால் அவரால் பள்ளிப் படிப்பைத் தொடர இயலவில்லை. ஆரம்பப் பள்ளியுடன் கல்வியை முடித்துக் கொண்டார். ஆனால், அவரது அறிவுக்கண் தேச விடுதலைக்கான போராட்டத்தை நோக்கி வெளிச்சத்தைப் பாய்ச்சியது. பிழைப்பு நெசவு என இருந்து வந்த அவர் தொழில் தேடி திருப்பூருக்குப் பெயர்ந்தார். அங்குதான் பிழைப்புடன் சேர்ந்து தேசத்துக்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். 


அவர் வழி காந்திய வழி..


குமரனின் சுதந்திர வேட்கை காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டிருந்தது. திருப்பூர் வந்த காந்தியடிகளின் பேச்சைக் கேட்டு அவரது விடுதலை வேட்கை இன்னும் அதிகமானது. அதனால் காந்தியடிகள் அறிவிக்கும் போராட்டங்களை ஒட்டி தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களில் எல்லாம் பங்கேற்றார்.


தேச பக்திப் பாடல்களை பாடினார். தேச பக்தியை ஊக்குவிக்கும் ஓரங்க நாடகங்களை நடத்தினார். திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்றத்தை நிர்வகித்தார். இவ்வளவு போதாதா? இவர் ஆங்கிலேயரின் கண்களை உறுத்த ஆரம்பித்தார்.


அப்படித்தான் 1932 ஆம் ஆண்டும் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஆங்கிலேயர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். எவ்வளவு அடித்தும் தான் ஏந்திய கொடியை விடாமல் பிடித்தவாரே இருந்தார் குமரன். குண்டாந்தடியால் தாக்கப்பட்டதில் மண்டை ஓடு உடைந்து ரத்தம் பெருகியபோதும் அவர் தேசப்பற்றைவிடவில்லை, கொடியையும் தான்.


சிறை சென்றார், செக்கிழுத்தார். இறுதியில் உயிரையும் விட்டார். ஆம், தலையில் படுகாயங்களுடன் கொடி காத்த குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இறுதி வரை வந்தே மாதரம் என்ற முழகத்தை மட்டும் அவர் துறக்கவே இல்லை.




தமிழகத்தில் வலுப்பெற்ற சட்ட மறுப்பு இயக்கம்:


1929 ஆம் ஆண்டு நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர கூட்டத்தில் மூவர்ணக் கொடி  ஏற்றப்பட்டு. ‘பூரண சுயராஜ்யமே  இந்திய தேசிய காங்கிரசின் குறிக்கோள்’ என பிரகடனப்படுத்தப்பட்டது. 1930 ஜனவரி 2ஆம் நாள் கூடிய காங்கிரஸ் செயற்குழு ஜனவரி 26 ஆம் நாளை பூரண சுயராஜ்ய தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தீர்மானித்தது. சட்ட மறுப்பு இயக்கத்தை  நடத்திடும்  முழுப் பொறுப்பும்  காந்தியிடம்  வழங்கப் பெற்றது. இதனை திருப்பூரில் தீவிரமாக முன்னெடுத்தார் திருப்பூர் குமரன். அப்படி 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் நடந்த விடுதலைப் போராட்டத்தில் தான் குமரன் உயிர் நீத்தார்.


நேரில் ஆறுதல் சொன்ன காந்தி:


தேசப்பற்று எந்த அளவுக்கு உயர்வானது என்பதற்கு குமரன் சான்றென்றால் அது மிகையல்ல. அதனலேயே குமரன் மறைவிற்குப் பின்னர் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, குமரனின் வீட்டிற்கே நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து குமரனின் குடும்பதிற்கு உதவிகள் செய்யப்பட்டு வந்தன. 2004 ஆம் ஆண்டு திருப்பூர் குமரனின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது நூறாவது பிறந்த நாளில் சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது.