நெல்லை டவுண் அருகே அரசு உதவி பெறும் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் இன்று உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நெல்லையில் பேட்டி அளித்துள்ளார்.
இந்நிலையில், சாப்ஃடர் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று (18.12.2021) முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
நடந்தது என்ன?
நெல்லை டவுண் செல்லும் சாலையில் உள்ளது சாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி, இந்த பள்ளியில் இன்று காலை 11 மணி அளவில் இடைவெளி விடப்பட்ட நேரத்தில் மாணவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர், அப்போது பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து உள்ளது. இதில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
10 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் மிகுந்த கோபத்துடன் பள்ளியில் கற்களை கொண்டு வீசியும், பள்ளியில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த சில மாணவர்கள் பள்ளியின் மாணவர்கள் சிலர் சுவரை பலமாக எட்டி உதைத்தார்கள். அதில்தான் சுவர் உடைந்தது என்றனர். விபத்து குறித்து பேசிய மற்றொரு மாணவர், சுவர் வலுவிழந்தே இருந்தது. அது சரியாக கட்டப்படவில்லை என தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்