இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்கள் தொடர்பாக, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.முருகன் என்பவர், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் விளக்கம் கோரியிருந்தார்.


இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை சார்பில் அவருக்கு பதில் அளிக்கப்பட்டது அதில், ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியாகும்.


கடந்த 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். இதுதொடர்பான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


2020- 2021ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதேபோலத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு அறிவிப்பு, 2020 ஜூலை 9-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பு 2020 ஜூலை 17-ம் தேதியும் வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிடப்பட்டிருந்தது.


ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு தகுதித் தேர்வும், போட்டித் தேர்வும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டித் தேர்வு அறிவிப்புக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’2013ஆம் ஆண்டு  தமிழக அரசால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 60,000 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மீண்டும் ஒரு போட்டித் தேர்வென்பது ஜனநாயகத்திற்கு முரணான அறிவிப்பு. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறை ஒன்றைக் கடந்த காலத்தில் அறிவித்தது ஆசிரியர் பணிக்காகக் காத்திருப்போருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. ஆனால் இன்னும் பழைய நடைமுறையே தொடருவது மனவேதனையளிக்கிறது.


2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுப் பணிக்காகக் காத்திருப்பவர்களுக்கு, தேர்ச்சி மூப்பு அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் ஏற்படக்கூடிய ஆசிரியர் காலிப் பணியிடங்களில் முழு முன்னுரிமை அளித்து பணி வழங்கி வாழ்வாதாரத்தை காத்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.