காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்ரீ பெரும்புதூர், சுங்குவார்சத்திரம், இருங்காட்டுகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தொழிற்சாலைகள்.  ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள், கெமிக்கல் தொழிற்சாலைகள், செல்போன் மற்றும் லேப்டாப் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.



இவ்வாறு அதிகளவு தொழிற்சாலைகள் இப்பகுதியில் இருப்பதால் அருகில் இருக்கும் மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவு ஆண்கள் மற்றும் பெண்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். பல தொழிற்சாலைகள், தங்களுடைய ஊழியர்களை தங்கள் சொந்த விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து அங்கு உணவுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தருவது உண்டு. இதற்காக ஊழியர்களிடம் குறிப்பிட்ட தொகையை அந்த தொழிற்சாலை மாதம் தோறும் தொழிலாளர்கள் சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளும் , இந்த நடைமுறை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.






அந்த வகையில் ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் செயல்படும் தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான Foxconn நிறுவனத்தில் சுமார் பணிபுரியும், 5000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பூந்தமல்லியில் உள்ள பகுதியில் அமைந்துள்ள விடுதியில் தங்கி பணி செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி புரிவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு விடுதியில் தங்கி பணியாற்றி வரும் பெண்கள் பெரும்பாலானோர், தென் மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை விடுதியில் தயாரிக்கப்பட்ட உணவு தரமற்ற முறையில் தயாரித்தால் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. விடுதியில் தங்கியிருந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு உடல் நலக் குறைவால் அருகிலிருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.பெரும்பாலானோர் இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

 

 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் இருந்து நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக உணவு அளிக்க வேண்டும் என்பது குறித்து ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 8 பெண்கள் குறித்த நிலையை சம்பந்தப்பட்ட விடுதி நிர்வாகம் தெரிவிக்காமல் வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு குறித்து நிர்வாகத்திடம் சக ஊழியர்கள் கேள்வி எழுப்பியபோது மழுப்பலான பதில்களை தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகும் நிர்வாகம் முறையான தகவல் தெரிவிக்காததால், எட்டு நபர்கள் உயிரிழந்து இருப்பார்களா என்று சந்தேகம் எழுந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். எட்டு நபர்கள் உயிரிழந்ததாக வாட்ஸ் அப்பில் செய்திகள் வேகமாக பரவியது.



 

இதனையடுத்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், விடுதியில் இருந்த பெண் ஊழியர்கள் அனைவரும் வெளியில் ஏறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையிலான காவலர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை-பெங்களூர சாலை ஸ்தம்பித்துள்ளது.