சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை என்றும், எதிர்க்கட்சியாக இல்லாமலும் ஊடகங்களுக்கு தைரியமாக அண்ணாமலை பேட்டி கொடுத்து வருகிறார் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த, பேச்சு அரசியல் வட்டாரங்களில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  


அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தார்.இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு  மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  


இதனையடுத்து, மாணவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு பாஜக  உண்ணாவிரதம் நடத்தி வருகிறது. இதில், மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 


 






 


இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில துணை தலைவரும் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், " மாணவியின் மரணத்துக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த அரசு உத்தரவிட வேண்டும்.  அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அளவுக்கு அதிமுக இல்லை. அமைதியின் உருவமாக அதிமுக உள்ளது. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை. எதிர்க்கட்சியாக இல்லாமலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே" என்று தெரிவித்தார். 


இதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்  வாழப்பாடி இராம சுகந்தன் தனது ட்விட்டர் பக்கத்தில், " ஆண்மை எதற்கு தேவை? தைரியம் போதுமே பேசுவதற்கு !! சகோதரர் நைனார் நாகேந்திரன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலில் எத்தனை முறை விழுந்தார் அப்போது அவர் ஆண்மையோடு தான் இருந்தாரா?" என்று வினவியுள்ளார். 


நயினார் நாகேந்திரன்: 


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த இவர், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாரளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பினை இழந்தார். 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து, பாசக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார். தற்போது, அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவராகவும் உள்ளார்.