கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றிற்கு நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்க கோரிய பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னதாக, ஓய்வுபெற்ற சுகாதாரப் பணி இணை இயக்குநர் நக்கீரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை, நீதிபதிகள் முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு (பொறுப்பு தலைமை நீதிபதி) நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், இப்போதைய, ஆபத்தான கொரோனா நோய்த் தொற்றுச் சூழ்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய அவசரம் இல்லை என்று வாதிட்டார். பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சி அமைப்புகளை, தனி அதிகாரிகள் தான் நிர்வகித்து வந்தனர். எனவே, தற்போது தேவையில்லாத அவசரம் காட்டப்படுகிறது என்றும் வாதிட்டார்.
மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிவ சண்முகம், " உச்சநீதிமன்ற ஆணையின் படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கால அட்டவணையை வரும் 27ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். கொரோனா தொற்று, தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி போதுமான தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தலை சமூகமான முறையில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேலும், தேர்தல் சுதந்திரமாகவும், வெளிப்படைத் தன்மை கொண்டதாகவும் நடத்திட,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் தொடர்ச்சியான ஆலோசனையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
இருதரப்பு, வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், " உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரான நிலைப்பாட்டை எங்களால் எடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது. தேர்தல் கால அட்டவணையை அறிவிக்கும் போது, மாநில அரசும், தேர்தல் ஆணையமும் தற்போதைய கொரோனா சூழ்நிலையை ஆய்வு செய்திருக்கும். மேலும், தேர்தலின் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும் என்றும் சுட்டிக்காட்டியது.
இருந்தாலும்,மனுதாரர் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் வாய்மொழியாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்