மசினகுடியில் புதருக்குள் பதுங்கியிருந்த T23 புலியை வனத்துறையினர் பிடித்தனர். இந்த புலிக்கு 13 வயதாகிறது. கடந்த வருடம் கவுரி என்ற பெண்ணையும், சில மாதங்களுக்கு முன்பு எஸ்டேட் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் என்ற நபரையும், சில வாரங்களுக்கு முன்பு பசுவன் என்பவரையும் அடித்துக் கொன்றது. அதுமட்டுமல்லாது 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அந்த புலி கொடூரமாக கொன்றுள்ளது. புலியின் இந்த கொடூர தாக்குதல்களால் அஞ்சிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்த ஊர் மக்களின் இடைவிடாத போராட்டத்தின் காரணமாகவும், நீதிமன்றம் தலையீட்டாலும் புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் கடந்த சில தினங்களாக தீவிரமாக ஈடுபட்டனர். முன்னதாக புலியை சுட்டுக்கொன்று விடுங்கள் என கிராமக மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய விதிகளின்படி புலியைக் கொலை செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது வீதிக்கு புறம்பான செயல் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 



இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புலியை சுட்டுக்கொல்ல வேண்டாம் எனவும், மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்குமாறும்  வனத்துறை அதிகரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அந்த புலியை பிடிக்க எவ்வளவு முயற்சி செய்தும் பிடிக்க முடியவில்லை. புலியை கண்காணிக்க வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அதன் பின்னர் புலிக்கு இரண்டு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனாலும் மயங்காமல் போக்கு காட்டி வந்தது. இருப்பினும் மயக்க மருந்தின் வீரியத்தால் புலி சோர்வடைந்துவிடும் என வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கேரளா மற்றும் கர்நாடக வனத்துறையும் தமிழக வனத்துறையோடு கைக்கோத்து தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டது. 3 மோப்ப நாய்கள், 2 கும்கி யானைகள், கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள், கால்நடை மருத்துவர்கள், 'டிரேக்கர்ஸ்' எனப்படும் புலியின் நடமாட்டத்தை பின்தொடரும் வனத்துறையின் சிறப்புக் குழு என பெரும் பட்டாளமே இந்தப் புலியின் நடமாட்டத்தைப் பின்தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில், இன்று மசினகுடியில் உள்ள புதருக்குள் T23 புலி பதுங்கியிருப்பது தெறியவந்தது. அங்கு சென்ற வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் மீண்டும் மயக்க ஊசி செலுத்தினர். அதே இடத்தில் புலி மயக்கமடைந்ததால் வனத்துறையினர் அதைப் பிடித்தனர். புலிக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதுடன், உடலில் காயங்கள் இருப்பதால் வெகுதூரம் அழைத்துச் செல்ல முடியாது என்பதால் மைசூரு உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மைசூரு சிகிச்சை மையத்தில் உள்ள T-23 புலிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடலில் காயங்கள் இருக்கும் நிலையில் ஹீமோகுளோபின் குறைந்து T-23 புலி சோர்வுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. T-23 புலிக்கு சிகிச்சை மற்றும் உணவு கொடுப்பது துவங்கி உள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.