தமிழ் ஈழம் அமையும், தமிழர்களுக்கென ஒரு நாடு உருவாகும் என்ற எனது கனவுகள் எல்லாம் கானல் நீராகிப்போயின, என் கனவுகள் எல்லாம் பொய்த்துப்போய்விட்டன என கண்ணீர் மல்க பேசியிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது, அவருக்காக தீக்குளித்து உயிர்நீத்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, அங்கு கூடியிருந்த தொண்டர்களிடம் பல நினைவுகளை கூறி கண்ணீர் விட்டார்.
ஈழம் அமையும் என்ற தனது கனவு பொய்த்துபோய்விட்டது என்று சொல்லிவிட்டு, அதனால், நான் மனதளவிலும், உடல் அளவிலும் தளர்ந்து நொறுங்கி போய்விட்டேன் என வைகோ நா தழுதழுக்க பேசியது கூடியிருந்த தொண்டர்கள் அத்தனைபேரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
பிரபாகரனுக்கு நிகரான தமிழ்த் தலைவன் தோன்றியதும் இல்லை ; இனித் தோன்றப்போவதும் இல்லை என பேசிய வைகோ, இந்திய ராணுவம் புலிகள் மீது தாக்குதல் நடத்தியபோது அதை தடுக்க முடியாத துயர நிலைக்கு தான் தள்ளப்பட்டதை கூறி வருத்தமடைந்தார். தொடர்ந்து பேசிய அவர், தான் ஈழத்திற்கு போனபோது காட்டில் உள்ள கண்ணாடிவிரீயன் பாம்பு தன் மீது விழுந்து ஓடியதையும், தனது படுக்கைக்கு அருகே தேள் கடிக்க வந்ததையும், பிரபாகரனும் தானும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தாக்க வந்த நட்டுவாக்கிளியை கிட்டு அடித்து விரட்டிய நிகழ்வுகளையும் தொண்டர்களிடம் சொல்லி, இது பிறர் சொல்வது மாதிரி கதைகள் அல்ல ; நடந்த உண்மை நிகழ்வுகள் என அழுத்தமாக பதிவு செய்தார்.
திமுகவில் தான் 30 ஆண்டுகள் இரவு பகலென பாராது பாடுபட்டதாகவும், பின்னர் தன்னுடைய பல கனவுகள் காற்றோடு காற்றாக போய் மறித்துவிட்டதாகவும் கம்மிய குரலில் சொல்லி உருகிய வைகோ, தன்னுடைய மகனை அரசியலுக்கு வரச் சொல்கிறார்கள், அவரும் நான் பட்ட கஷ்டமெல்லாம் படவேண்டுமா என்று தோன்றுகிறது என பேசி கலங்கினார்.
இப்போதெல்லாம் அரசியல் என்பது வியாபாரம் போல் ஆகிவிட்டதாகவும், கொள்கை, லட்சியம் என்பதெல்லாம் யாருக்கும் கிடையாது என சொன்ன வைகோ, தான் கலைஞர் கருணாநிதிக்காக என்னென்ன கஷ்டங்களையெல்லாம் தாங்கினேன் என்பதையும் பட்டியலிட்டார்.
திமுகவில் சேர்ந்த பிறகு, தனக்கு அந்த கட்சியே உயிர் என்று ஆகிப்போனது. எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு விலகி போன பிறகு திமுக பலவீனமாகிவிட்டது என்றும், பல இடங்களில் திமுக கொடியை கூட ஏற்ற முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், தான் துணிந்து சென்று மிரட்டல் உருட்டல்களை கடந்து கொடியேற்றினேன் என்றார் வைகோ.
அத்திபட்டி கிராமத்தில் பேச போய்விட்டு திரும்பும்போது தன் மீது எறியப்பட்ட பெரிய கல்லை குறுக்கே விழுந்து தடுத்து, உதடு பிளந்து காயம்பட்ட தெக்கடன்செவல் குருசாமியை நினைவுகூர்ந்த வைகோ, அந்த கல் தன் தலையில் விழுந்திருந்தால் அன்றே செத்திருப்பேன் என பேசினார். குருசாமியை போல, முத்து, கேவிகே சாமி போன்றோர் எல்லாம் திமுகவிற்காக வெட்டு, குத்து வாங்கியவர்கள் என்றும் பேசிய வைகோ, இன்று உள்ள முன்னணி தலைவர்களில் கட்சிக்காக காயம்பட்ட, பாடுபட்ட தலைவர்கள் யார் இருக்கிறார்கள் என கேள்வியும் எழுப்பினார்.
திமுகவிற்காக தென்னாட்டிலேயே வெட்டு, குத்துகளை எதிர்த்து நின்றது தான் ஒருவன்தான் என்று சொன்ன வைகோ, ஒரு முறை கலைஞரை கருணாநிதி என சொன்னதற்காக அதிமுக எம்.பி. ஒருவரை அடிக்க சென்றதையும் கூறி, பல இடங்களில் கலைஞருக்காக பண்பாடே இல்லாமல் கூட நடந்திருக்கிறேன் என்று கண்கலங்கினார்.
கலைஞரை காக்க என் உயிரையே பல நேரங்களில் பணையம் வைத்தேன் என்ற வைகோ, இன்றுள்ள தலைவர்களில், உயிரை துச்சமாக மதித்து போராடிய யாராவது இருக்கிறார்களா என்றும் கேட்டார். கலைஞரின் மகனான ஸ்டாலின் இன்று கட்சியையும், ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். அவருக்கு துணையாக நான் இருக்கிறேன். திமுகவையும் மதிமுகவையும் காக்க வேண்டியது கடமையும் எனக்கு இருக்கிறது என்று பேசி முடித்தார் வைகோ.