சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,


“ தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணிநேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.


மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரி) மாவட்டத்தில் இடியுடன் கூடிய  மிதமான மழையும், தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.




நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய( திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், தருமபுரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.




சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரியாக பதிவாகும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை மற்றும் அவலாஞ்சியில் தலா 8 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக உடுமலைப்பேட்டையில் 1 செ.மீ. மழையும் பதிவாகியது.


மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இன்று முதல் வரும் 18-ந் தேதி வரை கேரளம், கர்நாடகம், கோவா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீச உள்ளது. இதனால், மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த மாதம் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


மேலும் படிக்க : Tasmac Shops Reopen | தமிழ்நாட்டின் நிதிநிலையை சரிசெய்யவே டாஸ்மாக் திறப்பு - வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி