தமிழ்நாடு அரசு மேலும் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி சென்னை பெருநகர போக்குவரத்து கிழக்கு பகுதி துணை ஆணையராக இருந்த டாக்டர் பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கே இதுவரை பதவியில் இருந்த சிபி சக்கரவர்த்தி சென்னை சைபர் க்ரைம் பிரிவின் காவல்துறை கண்காணிப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பதவியில் இருந்த ஓம் பிரகாஷ் மீனா ஐ.பி.எஸ்.  சென்னை பெருநகர போக்குவரத்து கிழக்கு பகுதிக்கான துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அரசு இன்று வெளியிட்டுள்ளது. 


ஆளும் திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஐஏஎஸ்  தமிழ் நாடு , மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் செயலாளராகப் பணி மாறுதல் பெற்றார். இதனைத் தொடர்ந்து மாநில திட்டக் குழுவின் உறுப்பினர் செயலாளராகப் பதவி வகித்து வந்த பாஸ்கர பாண்டியன் ஐஏஎஸ் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக , பொறுப்பேற்றார். 


மற்றொருபக்கம், இதே போல சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் இயக்குனராக பொறுப்பு வகித்த டி.ஜி.பி. முனைவர் பிரதீப் வி பிலிப். அவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை கல்லூரியின் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார். ஆபரேஷன்ஸ் பிரிவின் ஏ.டி.ஜி.பி. முனைவர் அமல்ராஜ் ஐ.பி.எஸ்., பணியிடம் மாற்றப்பட்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அகாடமியின் இயக்குனராக பணியிடம் மாற்றப்பட்டார்.இதுதவிர கடந்த ஜூன், ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 32 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.