புதுச்சேரி : புதுச்சேரியில் பள்ளி சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டிய வழக்கில் சிக்கந்தர் மகனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்த நிலையில் சிறுமியை மிரட்டியதாக சிக்கா (எ) சிக்கந்தர் , ரவுடி பேபி சூர்யா ஆகியோர் சைபர் கிரைம் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். 


யுடியூபர் மகன் கைது


புதுச்சேரியை சேர்ந்த பிளஸ் 1 பயிலும் சிறுமி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார். சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு அறிமுகம் இல்லாத புதிய நபரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. நாளைடைவில் இருவரும் குறுஞ்செய்தி அனுப்புவது, வீடியோக்களை பரிமாறுவது மூலம் நட்பாக பழகி உள்ளனர். அவர்கள் பழகிய 15 நாட்களுக்குள் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.


பின்பு, ஆபாச வீடியோக்கள் மற்றும் அவரது அந்தரங்க வீடியோக்களை அனுப்பி உள்ளார். சிறுமியையும் நிர்வாணமாக வீடியோவில் தோன்றுமாறு மிரட்டி உள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த அந்த சிறுமி இது குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தாய் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நவீன மென்பொருட்களை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் மூலமாக அந்த வீடியோவை அனுப்பியது யார் என்று விசாரணை நடத்தி வந்தனர்.


ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டல்


போலீசார் விசாரணையில் சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டியது மதுரை சேர்ந்த பிரபல யூடியூபர் சிக்கந்தர் ஷா - சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலி (24) என்பதும், ரவுடி பேபி என்று அழைக்கப்படும் திருச்சி சூர்யா அவருடைய சித்தி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அஷ்ரப் அலியை கைது செய்ய சைபர் கிரைம் சீனியர் எஸ்பி கலைவாணன் உத்தரவின்பேரில், காவல் ஆய்வாளர் தியாகராஜன், கீர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார், மதுரையில் பதுங்கியிருந்த அஷ்ரப் அலியை கைது செய்து புதுச்சேரி கொண்டு வந்தனர்.


 சிக்கிய ரவுடி பேபி திருச்சி சூர்யா...


அவரது செல்போனை போலீஸார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பல்வேறு பெண்களுக்கு இதுபோன்று அஷ்ரப் அலி ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அஷ்ரப் அலியை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சைபர் கிரைம் போலீசார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தின் ஷா, சுமி ஆகியோரையும் விசாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்தனர்.


ரவுடி பேபி திருச்சி சூர்யா தனி அறையில் விசாரணை...


இந்த நிலையில் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தின் ஷா, சுமி ஆகிய 3-பேரும் விசாரணைக்கு வரும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன் அடிப்படையில் இன்று யுடியூபர் சிக்கந்தர் (எ) சிக்கா, சிக்காவின் மனைவி சுமி மற்றும் ரவுடிபேபி சூர்யா ஆகியோர் கோரிமேடு பகுதியில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்கள் 3-பேரையும் போலீசார் தனி அறையில் வைத்து சுமார் 2-அரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.