ABP Nadu Exclusive: 'தமிழை விரும்புபவர்கள் அறிவியலை நேசிப்பார்கள்' - சி.எஸ்.ஐ.ஆர்., தலைமை இயக்குநர் பேட்டி
ABP Nadu Exclusive: 'தமிழை விரும்புபவர்கள் அறிவியலை நேசிப்பார்கள்' - சி.எஸ்.ஐ.ஆர்., தலைமை இயக்குநர் பேட்டி
அருண் சின்னதுரை Updated at:
11 Aug 2022 12:50 PM (IST)
”முயற்சி செய்யாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடியாது. அதனால் அதனை நாமே எடுத்துக்கொள்ள வேண்டும். பிறர் நம்மை முயற்சிக்க வைக்கும் போது சுமையாக தோன்றும் என்றார்.” - சி.எஸ்.ஐ.ஆர் தலைமை இயக்குநர்.
சிவகங்கை மாவட்டம் மத்திய மின் வேதியியல் ஆய்வக இயக்குநராக பதவி வகித்தவர் ந.கலைச்செல்வி. இவர் தற்போது டில்லி C.S.I.R அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநராகவும், செயலாளாராகவும் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இயங்கிவரும் 37 ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைமையிடம் புது டில்லியில் உள்ளது. இந்த அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுமத்தில் 80 ஆண்டு கால சி.எஸ்.ஐ.ஆர்.,நிறுவனத்தின் முதல் பெண் பொது இயக்குநர் மற்றும் செயலாளரும் இவர் தான். மேலும் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பொது இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காரைக்குடி சிக்ரிக்கு வந்த அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது "Abp நாடு' க்கு தனியாக பேட்டி அளித்தார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் அறிவியல் துறையில் எளிமையாக சாதிக்க முடியுமா ?
கண்டிப்பாக சாதிக்க முடியும். எந்த பள்ளியில், கல்லூரியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல. அது அரசுப் பள்ளியாக, தனியார் பள்ளியாக இருக்கலாம். ஆனால் எப்படி படிக்கிறோம் என்பது தான் முக்கியம். நிறுவனங்கள் கொடுக்கும் போதனையை எடுத்துக் கொண்டு எப்படி செயல்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்.
மக்களிடம் எலெக்ட்ரிக் வாகனம் பயன்படுத்துவதில் தற்போதும் பயம் உள்ளதே?
முதல்முறையாக மின்சாரத்தை கண்டுபிடிக்கும் போது, அதனை பயன்படுத்துவதில் அச்சம் இருந்தது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அதனை எவ்வாறு கையாள வேண்டும். விபத்தை எப்படி தவிர்க்கலாம் என தெரிந்துவிட்டது. அதைப்போல் லித்தியம் பேட்டரி குறித்து பரவலாக தெரிந்துவிட்டால் எல்லோரும் எளிமையாக பயன்படுத்திவிடுவார்கள்.
சி.எஸ்.ஐ.ஆரில் முதல் பெண் இயக்குநராக தேர்வு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு
இது மிகப்பெரும் வாய்ப்பாக பார்க்கிறேன். அனைத்து தரப்பு பெண்களையும் உற்சாகப்படுத்தும் விதமாகவும் இருக்கிறது.
சி.எஸ்.ஐ.ஆரில் முதல் கட்ட செயல்பாடு என்னவாக இருக்கும் ? இலக்கு என்ன ?
நம் தாய் திருநாட்டில் இயங்கும் சி.எஸ்.ஐ.ஆரின் பெருமையும், நம் நாட்டின் பெருமையையும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலக அரங்கில் எடுத்துச் செல்வது என்னுடைய இலக்காக இருக்கும்.
அறிவியலை விரும்பும் தமிழ் மாணவர்களுக்கு சொல்ல விரும்புவது ?
தமிழை விரும்பும் அனைவருமே அறிவியலை விரும்புவார்கள். தமிழின் மூலம் அறிவியலை அறியும் அனைவரையும் உலகத்தால் விரும்பப்படுவார்கள்.
முயற்சி என்பது என்ன ? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்
முயற்சி என்பது ஒவ்வொரு நபரும் தானாக மேற்கொள்ளவேண்டும். அல்லது தற்போது காலகட்டம் அதன் அவசியத்தை உணர்த்தும். முயற்சி செய்யாமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடியாது. அதனால் அதனை நாமே எடுத்துக்கொள்ள வேண்டும். பிறர் நம்மை முயற்சிக்க வைக்கும் போது சுமையாக தோன்றும் என்றார்.