எத்தியோப்பியா  நாட்டிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.11.75 கோடி மதிப்புடைய 1.218 கிலோ கோக்கையின் போதைப்பொருள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பை, உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கொண்டு வந்த சா்வதேச போதை கடத்தும் கும்பலை சோ்ந்த, வென்சிலா நாட்டு பெண் பயணியை சுங்கத்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியன் நாட்டின் அடீஸ் அபாபா நகரில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் மிகப்பெரிய அளவில் போதைப் பொருள், சர்வதேச கடத்தல் கும்பல் கடத்தி வருவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த அனைத்து பயணிகளையும் தீவிரமாக கண்காணித்தனர். மேலும் பெண் பயணிகளை கண்காணிப்பதற்காக பெண் சுங்க அதிகாரிகளும் பயன்படுத்தப்பட்டனா். 



 

இந்த நிலையில் வெனிசுலா  நாட்டைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜோயில் டோரீஸ் (38) என்ற பெண் பயணி, சுற்றுலாப் பயணிகள் விசாவில் இந்த விமானத்தில் சென்னை வந்திருந்தார். இவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது டோரீஸ் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதை அடுத்து சந்தேகம் வலுத்தது. பெண் சுங்க அதிகாரிகள் டோரீஸ்சை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனார். அப்போது அந்தப் பெண் பயணியின் உள்ளாடைகளுக்குள்ளும், அவருடைய கைப்பைக்குள்ளும் கோகைன் என்ற மிகவும் விலை உயர்ந்த, வீரியமான போதை பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 

 

டோரீஸ்சிடமிருந்து இருந்து 1.218 கிலோ கோக்கையின்  போதை பொருளை கைப்பற்றினார். அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 11.75 கோடி. இதை அடுத்து சுங்கு அதிகாரிகள் அந்தப் பெண் பயணியை கைது செய்தனர். அதோடு அவரை கைது செய்துள்ளது பற்றிய தகவலை அவருடைய நாட்டின் தூதராக அலுவலகத்திற்கும் தகவல் தெரியப்படுத்தினர். மேலும் டோரீஸ்சை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.
  





டோரீஸ் சென்னையில் யாரிடம் இந்த போதைப் பொருளை கொடுக்க எடுத்து வந்தார் என்று விசாரணை நடக்கிறது. மேலும் இவர் சர்வதேச போதைபொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்த பெண் என்றும் தெரிகிறது. இவருடைய பாஸ்போர்ட்டை சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர். டோரீஸ் ஏற்கனவே இதைப் போல் கடத்திக் கொண்டு வந்திருக்கிறாரா? சென்னைக்கு இல்லாமல் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு கடத்தி சென்றிருக்கிறாரா? என்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ஒரு வெளிநாட்டு பெண் பயணியிடமிருந்து  ரூபாய் 11.75 கோடி மதிப்புடைய கோக்கையின் போதை பொருள் பறிமுதல் செய்திருப்பது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது போன்ற பெரிய அளவில் போதை பொருள் பறிமுதல் செய்வது, சென்னை விமானநிலையத்தில்  இது முதல் முறை என்று கூறப்படுகிறது.