தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுைற முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா:
கோயிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா, கடந்த 3ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வரும் திருவிழாவில் நாள்தோறும் அம்பாள் பல்வேறு அவதாரக்கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார்.
இதையும் படிக்க: பக்தர்களே! திருப்பதி தரிசனத்துக்கு இனி Whatsapp-இல் டிக்கெட்.. இதோ விவரம்
தசரா திருவிழாவின் சிகர நிகழ்சியான மஹிசா சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு கோவில் கடற்கரையில் நடைபெற உள்ளது. மாலை அணிவித்து விரதம் இருந்த பக்தர்கள் குழுக்களாகவும் வீடு வீடாகச்சென்று பெற்ற காணிக்கைகளை கோவில் முன்புள்ள உண்டியலில் செலுத்தி விட்டு குடும்பத்தோடு அம்மனை தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர்.
அலைமோதிய பக்தர்கள்:
இதனால் இன்று காலை முதலே கோவில் மற்றும் கடற்கரை பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 250 சிசிடிவி கேமராக்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் 4000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் பகுதி முழுவதும் பக்தர்களின் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது.
இதையடுத்து, திருவிழாவின் 11ஆம் திருநாளான நாளை அம்மனுக்கு காப்பு களையப்பட்டவுடன் பக்தர்களும் காப்பு களைந்து விரதத்தை முடிக்கின்றனர். விழாவின் நிறைவு நாளான 14-ஆம் தேதி காலையில் சிறப்பு அபிேஷக ஆராதனைகள், மதியம் சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இந்து கடவுளாக விளங்கக்கூடிய சிவபெருமானுக்கு எப்படி சிவராத்திரி பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளதோ, அதேபோன்று அம்மன்களுக்கு உகந்த ராத்திரியாக நவராத்திரி விளங்கி வருகிறது.
இதையும் படிக்க: தென்திருப்பதி ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய புரட்டாசி மாத தேரோட்டம்!