தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு, வரும் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்  நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் செயல்வடிவ குழுக்களை அக்கட்சி அமைத்துள்ளது. 


நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவரது ஒவ்வொரு செயல்பாடுகளும் மக்களாலும், அரசியல் கட்சிகளாலும் கண்காணிக்கப்பட்டே வருகிறது. அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய் இதுவரை த.வெ.க.வின் கொள்கை என்னவென்று இதுவரை கூறவில்லை.


முக்கிய அறிவிப்பு வெளியிட்ட விஜய்:


இந்த நிலையில், தவெக மாநாடு தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை அக்கட்சி தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கழகத் தலைவர் அறிவித்தபடி. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா. வருகிற 27.10.2024 அன்று. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது.


மாநாட்டுக்கான களப் பணிகள் தொடத்துவரும் நிலையில், தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் மாநாட்டுப் பணிகளுக்கென ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் செயல்வடிவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது.


முழு மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதாரக் குழு தலைவராக கட்சியின் பொருளாளர் வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ஒருங்கிணைப்பு குழு:


சட்ட நிபுணர்கள் குழு தலைவராக வழக்கறிஞர் குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். வரவேற்பு குழு தலைவராக மதுரை சேர்ந்த தங்கபாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சுகாதாரக் குழு தலைவராக டாக்டர் பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். 


விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிலே அவர் தனது கொள்கையை மக்கள் மத்தியில் கூற உள்ளார். தமிழ் தேசியம், திராவிடம், தேசியம் என பல கொள்கைகள் தமிழ்நாட்டின் அரசியலில் மோதிக் கொண்டு வரும் சூழலில், நடிகர் விஜய் எதை சார்ந்து இயங்கப் போகிறார்? என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.


தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை அரசியல் இருந்து வருகிறது.


இப்படிப்பட்ட சூழலில், நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.