தமிழகத்தில் முதன் முறையாக விளாத்திக்குளம் தாலுகா அரசு மருத்துவமனையில் ரூ.42 லட்சத்தில் 22 ஆக்சிஜன் சிலிணடர் மற்றும் பிராணவாயு அறை அமைக்கப்பட்டது. 

விளாத்திகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனை தாலுகா மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஏகம் பவுண்டேசன் சமூக பொறுப்பு நிதி ரூ.38 லட்சம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.4.09 லட்சம் செலவில் பிராணவாயு கூடம், 60 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 22 டி டைப் ஆக்சிஜன் சிலிண்டர்கள், 60 படுக்கைகளுக்கான உறிஞ்சு குழாய், பாதுகாப்பு அலாரம் ஆகியவை ஒவ்வொரு தளத்திலும் உள்ள உள்நோயாளிகள் பிரிவில் பொருத்தப்பட்டுள்ளன.



இதில் ஒவ்வொரு சிலிண்டரும் 7 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். மேலும், ஏகம் பவுண்டேசன் சார்பில் ரிமோட் கண்டோலருடன் கூடிய 6 தீவிர சிகிச்சை கட்டில்கள் வழங்கப்பட்டுள்ளன.தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு, அரசு மருத்துவமனைக்கு 22 எண்ணிக்கை கொண்ட ஆக்சிஜன் சிலிணடர் மற்றும் பிராணவாயு அறையை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, அவர் விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.



               பின்னர் அவர் பேசுகையில், ‛‛விளாத்திக்குளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான மற்ற அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு சிறந்த மற்றும் விரைவான சிகிச்சையை உறுதி செய்யவும், மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும், நோயாளிகளை நீண்ட தூரம் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தைத் தவிர்க்கும்,’’ என்றார்.

 



 இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி  செய்தியாளர்களிடம் கூறும்போது, கொடநாடு கொலை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய்யாக குற்றம் சாட்டப்படுவதாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கேட்டபோது, "மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும்" என கூறினார்.

 

தொடர்ந்து பேசுகையில், ‛‛ மக்களுக்கு தெரியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா இல்லையா என்று. பத்து வருடங்களாக  மக்களைதொடர்ந்து ஏமாற்றி கொண்டு இருந்ததால் தான் இன்று மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றியது கிடையாது, ஆனால் முதல்வர் ஸ்டாலின்,  தலைவர் கலைஞர் வழியில் முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் தொடங்கி இன்றுவரை தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக  தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறார். ஒரே நாளில் யாராலும் அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாது. ஆனால், இதை பொறுக்காமல் காழ்ப்புணர்ச்சியோடு அரசியல் செய்யும் நோக்கில் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.திராவிட முன்னேற்றக் கழகம் யார் மீதும் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கும் நோக்கத்தோடு நடவடிக்கையை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், ஒரு பெரிய கொலை வழக்கை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருக்க வாய்ப்பில்லை. யாராக இருந்தாலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தன்னுடைய கடமையை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இதில் அவர்களுக்கு (அதிமுகவிற்கு) மடியில் கனமிருந்தால் வழியில் பயம் இருக்கலாம் என்றார்.

 

எதிர்க்கட்சியினருக்கு சட்டமன்றத்தில் போதிய கால அவகாசம் கொடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, யார் எதிர்க்கட்சியினராக இருந்தாலும் அவருடைய கருத்துக்களும் கேட்கப்படுகிறது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிலும் எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதேபோன்று சட்டமன்றத்திலும் பேச வாய்ப்பளித்த போது ? அவர்கள் பேச முடியாமல் வெளியே சென்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.