தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் வருந்தவில்லை. அவர்கள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 


தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கப்படுவதாக அறிந்ததும் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் 2018 பிப்ரவரி 5 ஆம் தேதி தொடர் போராட்டத்தை தொடங்கினர். ஏற்கனவே செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.


தூத்துக்குடியில் காற்றுமாசு படுவதாக கூறி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடைபெற்ற அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் எதிராக 100-வது நாளாக பேரணியாக சென்றனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 2 பெண்கள் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.


காவல் துறையினரால் போராட்டத்தில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட 93 நபர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் வீதம் நிவாரணத் தொகையாக ரூபாய் 93 இலட்சம் வழங்கப்பட்டது. மேற்காணும் நிகழ்வு தொடர்பாக போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட வழக்குகளைத் தவிர 38 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.


அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 17 காவல்துறை அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சைலேஷ் குமார் யாதவ், கபில் குமார் சி. சரத்கர் ஆகிய இந்திய காவல் பணி அதிகாரிகள் மகேந்திரன், லிங்கத்திருமாறன் ஆகிய காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இரண்டு ஆய்வாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர ஒரு காவல்துறை ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் ஒருவர் மீது குற்ற வழக்கு பதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது பெருந்தண்டனை குற்றப்பிரிவின் கீழ் ஒரு உதவி ஆய்வாளர் இரு இரண்டாம் நிலைக் காவலர் ஒரு முதல் நிலைக் காவலர் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மூன்று முதல் நிலைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


துப்பாக்கிச் சூடு தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரித்து மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுந்தர்  செந்தில்குமார் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. 


இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் வருந்தவில்லை. அவர்கள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? யார் பொறுப்பாளர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 


இதையடுத்து, எதிர்மனுதாரர்கள் ஆட்சேபத்திற்கு பதிலளிக்க மனுதாரர் ஹென்றி திபேனுக்கு உத்தரவிட்டு , வழக்கானது வரும் ஜூலை 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.