கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்ததால் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு மாநில அரசு முழு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என  எதிர்க்கட்சிகள் கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.


மேலும் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு தார்மிகப் பொறுப்பேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகக் கோரி அ.தி.மு.க சார்பில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல் உள்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


அதேபோல, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் மனு அளித்துள்ளனர்.



இந்நிலையில் தி.மு.க-வின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி மரணம் அடைந்ததை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் மற்றும் தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் இது நடத்தப்பட்டது.




தேசிய அளவில் பூர்ண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.




எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஆளுநரைச் சந்திப்பது போன்றவை எதிர்பார்த்த ஒன்று தான் எனவும், ஆனால் தி.மு.க-வின் தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. 



சென்னை, வள்ளுவர் கோட்டத்தில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியது.. மதுவிலக்கு பற்றி நாங்கள் புதிதாக பேசவில்லை. பம்பாய் மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மதுவிலக்கு குறித்து அதே அவையில் வலியுறுத்தியுள்ளார்.


நாங்கள் அம்பேத்கரின் வாரிசுகள் அதனால் முழு மதுவிலக்கை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். தமிழ்நாட்டில் மட்டுமே மதுவை தடைசெய்ய சொல்லவில்லை என்றும் தேசிய அளவில் இதை கொள்கையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசையும் வலியுறுத்துவதாக கூறினார். 




சாராயத்தில் கள்ளச்சாராயம், நல்ல சாராயம் என்பதே கிடையாது. எல்லாம் விஷம் தான். இப்படி சாராயத்தை வாங்கி குடிப்பவர்கள் அடித்தட்டு மக்கள். எனவே அனைத்து வகையான சாராயத்தையும் தடை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தினார்.




போதைப் பழக்கம் என்பது தேசியப் பிரச்னை என்றும், கள்ளக்குறிச்சி விவகாரத்தை மட்டும் பேசாமல், தொலைநோக்குப் பார்வையில் மதுவிலக்கே நிரந்தரத் தீர்வு என்பதை விடுதலைச் சிறுத்தைகள் முன்வைப்பதாக கூறினார்.




பெண்கள் தலைமையில் விசிக மது விலக்கு மாநாடு அறிவிப்பு




இந்நிலையை கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடந்து வருகின்றன. கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு மதுபானங்கள் தீர்வு அல்ல. மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தினால் தான் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும்.


முழு மதுவிலக்கு கொள்கையில் வி.சி.க. உறுதியாக உள்ளது. பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி வி.சி.க. சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்தார்.