அரசு விழாக்களில் ஒற்றை மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் இருக்க கூடாது, இது அனைவருக்குமான திராவிட மாடல் ஆட்சி என தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 


தர்மபுரி மாவட்டம் ஆலாபுரம் ஏரியில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியில், வேத மந்திரங்கள் முழங்க சமஸ்கிருத மொழியில் இந்து மதப்படி பூமி பூஜை செய்வதற்கு தர்மபுரி மக்களவை உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் ஆலாபுரம் ஏரியில் நடைபெறவுள்ள  சீரமைப்புப் பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று, பூமி பூஜையினை தொடங்கி வைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் தர்மபுரி எம்.பி மருத்துவர் செந்தில்குமார் அவர்களை அழைத்துள்ளனர்.






அழைப்பினை ஏற்று  ஆலாபுரம் ஏரியில் நடைபெறவுள்ள  சீரமைப்புப் பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் சென்றுள்ளார். அங்கு அந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், புரோகிதரை அழைத்து வந்து சமஸ்கிருத மந்திரங்கள் ஓத இந்து மதப்படி பூமி பூஜையினை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனை அறிந்த மக்களவை உறுப்பினர் செந்தில் குமார், அதிகாரிகளிடம், அரசு நிகழ்ச்சிகளில் ஒற்றை மதம் சார்ந்த நிகழ்வுகள் இருத்தல் கூடாது. கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே? இஸ்லாமிய மதத்தினைச் சேர்ந்தவர்கள் எங்கே? எந்த மதத்தினையும் சேராதவர்கள் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார். இது அனைவருக்குமான திராவிட மாடல் ஆட்சி, இதில் ஒற்றை மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் இருக்கக்கூடாது. முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், ஒற்றை  மதம் சார்ந்த நிகழ்வுகள் இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,  இனிமேல் அரசு விழாக்களில் இது போன்று நடத்த கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். 






மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தனது, டிவிட்டர் பக்கத்தில் ”ஓரளவுக்கு மேல் என் பொறுமையினை சோதிக்கிறார்கள்”  கூறிப்பிட்டுள்ளார்.


மக்களவை உறுப்பினர் செந்தில் குமாரின் இந்த செயலினை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி, அரசு நிகழ்ச்சிகள் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் அவர்களின் துணிச்சல் மிகு செயல்பாடு பாராட்டத்தக்கது என கூறியுள்ளார்.


அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு அவர்கள், சபாஷ் டாக்டர்! பேரறிஞர் அண்ணா கலைஞர் வழியில் களமாடும் மானமிகு தோழர் மக்களவை உறுப்பினர்  செந்தில் குமார் அவர்களின் மதச்சார்பின்மை பணி தொடரட்டும் என சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளார்.