திரைப்பட இயக்குனர் சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே, வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியும் என கவிஞர் லீனா மணிமேகலையிடம் உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.
நடிகைகள், பாடகிகள் என சினிமா பிரபலங்கள் தங்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு ‘‘மீ டூ’’ ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் பதிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாக இயக்குனர் சுசிகணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலையும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்.
இதுதொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அந்த அவதூறு வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், விசாரணை நடைமுறையில் தவறு நடக்கிறது என்றும் குற்றம்சாட்டியுள்ள லீனா மணிமேகலை, விசாரணை நடத்தி வரும் மாஜிஸ்ட்ரேட் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை எனவும் எனவே வழக்கை வேறு மாஜிஸ்ட்ரேட்க்கு மாற்றி உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் சுசிகணேசன் தரப்பில், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு விசாரணையை லீனா மணிமேகலை இழுத்தடித்து வருவதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவதூறு வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைப்பதாக பிரமானப்பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே, வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியும் என கவிஞர் லீனா மணிமேகலை தரப்பிடம் திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணைய ஜூலை 18ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு எதிரான வழக்கு 2000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி
தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்த காவலரின் வழக்கை 2000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2003ஆம் ஆண்டு நடந்த இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட அருணாச்சலம் என்பவர் 2005ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2003ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்ததாக கருதி பணி மூப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபி-க்கு அருணாச்சலம் மனு அளித்தார். இந்த மனுவை பரிசீலிக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அருணாச்சலத்தின் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அருணாச்சலம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஜெ. ஆஜராகி, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 2021ஆம் ஆண்டு மனுதாரரின் கோரிக்கைய டிஜிபி பரிசீலித்ததாகவும், பணியில் சேர்ந்த 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்காமல் 11 ஆண்டுகள் கழித்து விண்ணப்பித்த காரணத்தால், மனுதாரர் நிராகரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இந்த தகவலை மறைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து தவறான மனுவை தாக்கல் செய்ததற்காக இரண்டாம் நிலை காவலரான மனுதாரர் அருணாச்சலத்திற்கு 2000 ரூபாய் அபராதம் விதித்து, டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்த அபராதத் தொகையை தமிழ்நாடு காவல்துறை மோப்ப நாய் பிரிவிற்கு வழங்கவும் மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் தொடர
ட்விட்டர் பக்கத்தில் தொடர
யூடியூபில் வீடியோக்களை காண