பாட்டாளி மக்கள் கட்சி துவக்கப்பட்டு 34வது ஆண்டு ஆவதை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் மாவட்ட செயலாளர் சேகர் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கொடி ஏற்றி நல திட்ட உதவிகள் வழங்கினார். பின் பள்ளி படிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கி அனைவருக்கும் இலவச சமச்சீர் கல்வி மது ஒழிப்பு போதை பொருள் ஒழிப்போம் போன்ற 10 உறுதிமொழிகளை ஏற்றனர்.
அதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது,
திமுக ஓராண்டு ஆட்சியில் 10 மாத காலம் கொரோனாவில் சென்று விட்டது. அதில் அவர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். திமுக சிறப்பான ஆட்சிக்கு முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதன் வேகம் போதாது நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று குற்றம்சாட்டினார். தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டை முழுமையாக தடை செய்ய குழு பரிந்துரை செய்தும் இதுவரை தமிழக அரசு எந்தவித நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.
இதற்கு என்ன காரணம் என தெரியவில்லை. கடந்த வாரம் கூட கோயம்புத்தூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஒருவர் உயிரிழந்தார். சூதாட்டத்திற்கு தடைச் சட்டத்தை அமல்படுத்தவேண்டும் என கூறிய பின்னர் இதுவரை 27 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இருந்தும் ஏன் சட்டத்தை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்துகின்றனர் என தெரியவில்லை என குற்றம்சாட்டினார்.
தமிழகத்தை பொறுத்தவரை போதைப் பொருட்கள் அதிகரித்து விட்டது, கஞ்சா, மாத்திரை, ஊசி போன்ற போதை பொருட்கள் மாணவர்களிடம் எளிதாக கிடைக்கிறது. போதை பொருட்கள் தொடர்பாக அரசு அவசரக் கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில் காவல் துறையினருக்கு எச்சரிக்கை செய்து போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிடவேண்டும். காவல் துறை நினைத்தால் மட்டுமே தமிழகத்தில் போதை விற்பனையை தடை செய்யமுடியும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் எனவும் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்