தமிழகத்தில் தொடர்ந்து ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் தினந்தோறும் இருவரும் ஏதேனும் கருத்துக்களை கூறி ஒருவரை ஒருவர் தாக்குவது வழக்கமாக வைத்துள்ளனர். இன்று முரசொலி செய்தி தாளில் ஆளுநர் நேற்று கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் பதிவு வெளியிட்டுள்ளனர். அதில் 

Continues below advertisement


”இது ஆளுநர் ரவி என்ற தனி மனிதரின் கோபம் அல்ல. பாரம்பரியக் கோபம். தனது முன்னோர்களின் கோபத்தை பிரதிபலிக்க வந்திருக்கிறார்.


தினந்தோறும் திராவிடம் பேசுபவர் நம்மை விட, அவர்தான். திராவிடம் இல்லாமல் அவர் பேசுவது இல்லை. இது நமக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது.


திராவிடம் என்ற வார்த்தையை வைத்து ஏமாற்றுகிறோமாம்! திராவிடம் என்பது ஏமாற்றுச் சொல் அல்ல, விழிப்புணர்வுச் சொல்! திராவிடம் என்பதும் தமிழ் என்பதும் ஒற்றைப் பொருள் தரும் இரட்டைச் சொற்கள்தான்.” என குறிப்பிடப்பட்டுள்ளது. 


நேற்றைய தினம் காசியில் நடந்த தமிழ்ச்சங்கம நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், “ தமிழகத்தில் நிலவும் சில தவறான மற்றும் எதிர்மறையான அணுகுமுறைகளை ஒழிக்க வேண்டும். சமுதாயத்தில் அனைத்து மக்களுக்கும் பலனளிக்கக் கூடிய கல்வி உள்ளிட்ட அம்சங்களை தங்களுடைய சொந்த காரணங்களுக்காக மறுக்கும் அரசியல், வருத்தத்தை அளிக்கிறது.  


50 ஆண்டுகளாக.... இந்தியா என்பது ஒரே நாடாக இருந்து வருகிறது.  ஆனால் அதனை சிலர் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் அமெரிக்காவை போல் பார்க்கின்றனர். அது தவறான விஷயம்.  இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் சில அம்சங்களை தமிழகம் மட்டும் ஏற்க மறுக்கிறது. இது தொடர்பாக தவறான கருத்துகள் கூறப்பட்டுள்ளது. இதில் உண்மை வெளிவர வேண்டும். பாரத தேசத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்றே. தமிழகத்தில் திராவிட ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகாலமாக மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர்”  என கூறினார். 


இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று முரசொலி செய்தி தாளில்: 


‘‘திராவிடம் என்ற சொல்லைவிடக்கூடாது என்று சொல்லி வருகிறோம். திராவிடன் என்ற சொல்லுக்கு அஞ்சுவது போல் தமிழன் என்ற சொல்லுக்கு அவன் அஞ்சுவதில்லை” (விடுதலை 22.11.1958) என்று பெரியார் எழுதினார் என்பதை மேற்காட்டியுள்ளது முரசொலி.


மேலும், நாமும் திராவிடன் என்ற சொல்லை விடக் கூடாது என்பதையே ஆளுநர் உணர்த்திக் கொண்டே இருக்கிறார். தமிழினத்தின் உயர்வுக்கும், மேன்மைக்கும் அடித்தளமான ‘திராவிட மாடல்’ தத்துவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ஆட்சியியல் தத்துவமாகச் சொல்லி இருக்கிறார்கள். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல; சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.


இத்தகைய ‘திராவிட மாடல்’ வளர்ச்சியின் மீதான கோபத்தைத்தான் ஆளுநரின் பேச்சுக்கள் வெளிப்படுத்துகிறது. இப்படி எத்தனையோ பேரின் எதிர்ப்பில் வளர்ந்ததுதான் திராவிட இயக்கம்!” என முரசொலி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று கூறுவதை ஆளுநர் மாற்றிக்கொள்ளவேண்டும் - அமைச்சர் பொன்முடி