வள்ளலார் சொல்லுவதை போல் கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக என்பதாக உள்ள இந்த திமுக கொடுங்கோல் ஆட்சிக்கு நிச்சயமாக 2024 தேர்தல் பதிலளிக்கும், புதுச்சேரி உட்பட தமிழகத்தில் 40 இடங்களிலும் அதிமுக பிஜேபி கூட்டணி வெற்றி பெறும் என காஞ்சிபுரத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டியளித்துள்ளார்.
அர்ஜூன் சம்பத் பேட்டி
காஞ்சிபுரத்திற்கு இன்று வருகைப்புரிந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால், தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறாமல் இருக்க வேண்டுமென்று சொன்னால் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும், சென்ற முறை காசியில் நரேந்திர மோடி போட்டியிட்டார். இந்தியாவில் காசி, ராமேஸ்வரம் இவ்விரண்டு தான் முக்கியம், ஆகவே இம்முறை தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் நரேந்திர மோடி போட்டியிட வேண்டும். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா கோயம்புத்தூரில் போட்டியிட வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி அற்புதமான ஆட்சி
அமித்ஷாவும், மோடியும் தமிழகத்தில் போட்டியிட வேண்டும், மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்கின்ற கட்சி தான் தமிழகத்தில் வெற்றி பெறும்,ஆகையால் தமிழகத்தில் அதிமுக பிஜேபி கூட்டணி ரொம்ப வலிமையாக உள்ளது, அந்த கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என திமுக ஊடங்கள் மற்றும் வேறு சில பேர் குழப்பங்களை எல்லாம் சொல்லுவார்கள். தற்போது எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தில் தலைமை பொறுப்பில் உள்ளார்.
இந்த திராவிட இயக்கங்களின் ஆட்சியிலேயே கடந்த முறை எடப்பாடி கொடுத்த ஆட்சி தான் சிறந்த ஆட்சி, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் மின்சாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏதும் இல்லை, திராவிட இயக்கங்களின் முதலமைச்சர்களிலேயே எம்.ஜி.ஆர்யை விட ஜெயலலிதாவை விட கருணாநிதியை விட அண்ணாவை விட சிறந்த முதலமைச்சர் எடப்பாடி தான், அவர் அற்புதமான ஆட்சியை கொடுத்திருக்கிறார்.
40 இடங்களிலும் அதிமுக பிஜேபி கூட்டணி
வெயிலின் அருமை நிழலில் தெரியும், திமுக ஆட்சிக்கு வந்து 17 மாதங்கள் ஆகின்றது, திமுகவின் கொடுங்கோல் ஆட்சியாக தான் இதனை மக்கள் பார்க்கின்றனர், வள்ளலார் சொல்லுவதை போல் கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக என்பதாக தான் உள்ளது,இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு நிச்சயமாக 2024 தேர்தல் பதிலளிக்கும், புதுச்சேரி உட்பட தமிழகத்தில் 40 இடங்களிலும் அதிமுக பிஜேபி கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.