இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்த செங்கோல் குறித்து திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் விளக்கம் அளித்தார்.


புதிய நாடாளுமன்ற கட்டடம்:


புதிய நாடாளுமன்ற கட்டடம் டெல்லியில் 64 ஆயிரத்து 500 சதுர அடியில், 970 கோடி ரூபாய் செலவில்  கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வரும் மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி இந்த கட்டடத்தை திறந்து வைக்கிறார். இதற்காக அனைத்து தரப்புக்கும் அழைப்பிதழ் அனுப்பும் பணி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மறுபக்கம் எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இப்படியான நிலையில், 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் வழங்கும்போது நேருவிடம் ஆங்கிலேயர்கள் கொடுத்த செங்கோலை, பிரதமர் மோடி புதிய கட்டடத்தில் வைப்பார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். 


இதையும் படிங்க: Sengol: இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று தந்த செங்கோல் தெரியுமா? அமித்ஷா தெரிவித்தது என்ன?


திருவாவடுதுறை ஆதினம்:


அந்த செங்கோலுக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு, இந்திய சுதந்திரத்தை அது எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை நாம் காணலாம். இந்த தகவலை தற்போது திருவாவடுதுறை ஆதீனமாக உள்ள ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். 


அவர் பேசியதாவது, "இந்தியா சுதந்திரம் அடைந்தது பற்றி நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். எப்படி சுதந்திரம் அடைந்தது? 1947 ஆம் ஆண்டுக்கு முன்பாக நாமெல்லாம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்தோம். அதனை முறியடித்து மகாத்மா காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் போன்ற எண்ணற்ற தலைவர்கள், மக்கள் இரத்தம் சிந்தி போராடி உயிர் நீத்துப்  பெற்ற சுதந்திரத்தை நாம் நினைத்து பார்க்க வேண்டும். சுதந்திரம் அடைவதற்கு முன்பு, நேதாஜி, நேரு, ராஜாஜி போன்ற தலைவர்கள் எப்படி சுதந்திரத்தைப் பெறுவது என ஆலோசனை செய்தார்கள். 


செங்கோல்:


அப்போது திருவாடுதுறை ஆதினத்தில் இருந்து அரசர்கள் ஆட்சி மாற்றம் செய்யும் போது இங்குள்ள செங்கோலை கொடுப்பார்கள். அதனைக் கேள்விப்பட்டவுடன் அந்த தலைவர்கள் எல்லாம் டெல்லியில் இருந்து விமானத்தை அனுப்பினார்கள். அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த 20வது  சன்னிதானம், இந்த தங்க செங்கோலை செய்துக் கொடுத்தார்கள். அதனை குமாரசாமி தம்பிரான் மூலமாக அனுப்பி டெல்லியில் நேருவிடம் வழங்கப்பட்டது.  வரும் மே 28 ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட உள்ளது. இதில் நான் (திருவாவடுதுறை ஆதீனம்) எல்லா ஆதீனங்களும் கலந்து கொள்கிறார்கள். அப்போது அந்த செங்கோலை பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்க இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.