ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவிற்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்த செங்கோல்(Sengol), எங்கு, எப்படி உருவாக்கப்பட்டது என்பதை  இந்த தொகுப்பில் அறியலாம்.


புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா:


டெல்லியில் 64 ஆயிரத்து 500 சதுர அடியில், 970 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. வரும் 28ம் தேதியன்று பிரதமர் மோடி இந்த கட்டடத்தை திறந்து வைக்க உள்ளார். அப்போது, இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கும்போது நேருவிடம் ஆங்கிலேயர்கள் கொடுத்த செங்கோலை, பிரதமர் மோடி புதிய கட்டடத்தில் வைப்பார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அந்த செங்கோலுக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு, இந்திய சுதந்திரத்தை அது எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை சற்றே விரிவாக பார்க்கலாம்.


இந்தியாவிற்கு சுதந்திரம்:


200 ஆண்டுகால தீவிர போராட்டங்கள், ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் தியாகங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு விடுதலை அளிக்க பிரிட்டிஷ் அரசு முன்வந்தது. இந்த பொறுப்பு மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் ஒப்படைக்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு விடுதலை வழங்கும்போது அதை எப்படி அடையாளப்படுத்துவது என அவருக்கு தெரியவில்லை. இதுதொடர்பாக, சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கிய நபரான நேரு உடனும் அவர் கலந்துரையாடினார். நேருவுக்கும் எந்தவொரு ஆலோசனையும் எழாத நிலையில், அவருக்கு நெருங்கிய மற்றும் மூத்த சுதந்திர போராட்ட வீரரான தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் முதலமைச்சரான ராஜாஜி எனப்படும் ராஜகோபாலாச்சாரியாரை அணுகினார்.






செங்கோல் வந்தது எப்படி?


வரலாற்று பதிவுகளை ஆராய்ந்ததன் மூலம், தமிழகத்தின் வரலாற்றில் இருந்தே நேருவின் கேள்விக்கான பதிலை கண்டுபிடித்தார் ராஜாஜி. அதன்படி, இந்தியாவின் ஒரு பழமையான மற்றும் நீண்ட ஆட்சியை வழங்கிய, சோழர் ஆட்சி காலத்தில் இருந்து இந்திய சுதந்திரத்திற்கான அடையாளத்தை கண்டறிந்தார். சோழர் ஆட்சி காலத்தில் ஒரு மன்னரிடமிருந்து இன்னொரு மன்னருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கும்போது செங்கோல் வழங்கப்படும். அந்த செங்கோலானாது அதிகாரத்திற்கான அடையாளமாக கருதப்பட்டது. ராஜகுருவின் மூலம் வழங்கப்படும் இந்த செங்கோலை பெறும்போது ஆண்டவனான சிவனின் ஆசியே கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்தது. இதேமுறையை பின்பற்றி செங்கோல் ஒன்று தயாரித்து, ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை பெறலாம் என ராஜாஜி தெரிவித்த ஆலோசனையை நேருவும் ஏற்றார்.



தமிழர்களின் கைவண்ணம்:


இதையடுத்து சற்றும் தாமதிக்காமல் செங்கோல் போன்ற பொருட்களை தயாரிப்பதில் கைதேர்ந்த, திருவாவடுதுறை ஆதீனத்தை ராஜாஜி தொடர்புகொண்டார்.  அப்போது, 500 ஆண்டுகளுக்கு முன்பே உருவான அந்த ஆதினத்தின் 20வது ஆதினமாக இருந்த, ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக சுவாமிகள் தங்க செங்கோலை தயாரிப்பதற்கான பொறுப்பை ஏற்றார். தொடர்ந்து, சென்னையில் உள்ள பிரபல உம்மிடி பங்காரு தங்க வியாபர நிறுவனத்துடன் சேர்ந்து, செங்கோலை வடிவமைத்தார். வலிமை, உண்மை மற்ரும் அதிகாரத்தை பிரதிபலிக்கும் விதமாக, sஎங்கோலின் உச்சியில் நந்தி வடிவத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில் கைலாயம் மதுரை என்பது உள்ளிட்ட சில தமிழ் வார்த்தைகளும் பொறிக்கப்பட்டு இருந்தன.


டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்ட செங்கோல்:


செங்கோல் தயாரானதும் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக சுவாமிகள் தனக்கு அடுத்த நிலையில் இருந்த, ஸ்ரீலஸ்ரீ குமாரசுவாமி தம்பிரானை அதிகாரத்தை கைமாற்றும் நிகழ்ச்சியை முன்னின்று நடத்த டெல்லிக்கு செல்லுமாறு பணித்தார். அவருடன் தேவாரம் பாடும் மாணிக்கம் ஓதுவர், நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை ஆகியோரும் அனுப்பப்பட்டனர். அதோடு, செங்கோலும் டெல்லியில் உள்ள நேருவின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


கைமாறிய ஆட்சி அதிகாரம்:


தொடர்ந்து, 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவு 11.45 மணியளவில் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து, குமாரசுவாமி தம்பிரான் செங்கோலை பெற்று புனித நீரை தெளித்து பூஜை செய்தார். அப்போது திருஞான சம்மந்தர் எழுதிய தேவாரத்திலிருந்து கோளாறு பதிகம் எனும் பாடலை, மாணிக்கம் ஓதுவார் பாட ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வரம் பாடி அசத்தினார். தொடர்ந்து, பாடலின் அடியார்கள் வானில் அரசால்வர் ஆனை நமதே எனும் வரி வரும்போது, செங்கோலை நேருவிடம் வழங்கி அவரது நெற்றியில் விபூதி பூசி மாலை அணிவித்தார்.  அந்த வகையில், சோழ சாம்ரஜ்ஜியத்தின் முறையை பின்பற்றி தான், ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சி அதிகாரம் இந்தியாவிற்கு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, நள்ளிரவு  12 மணியளவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாக நேரு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.