திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை சென்னகேசவ மலைகளுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 1958ஆம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த போது அவருடைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது, இந்த அணையின் உயரம் 119 அடி. அணையின் நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கனடியாகும். மேலும் சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள், கலைநயமிக்க வண்ண ஓவியங்கள், நீச்சல் குளம், படகு குழாம், முதலைபண்ணை, வண்ண மீன் கண்காட்சி, ஆதாம் ஏவாள் பூங்கா, குழந்தைகள் விளையாடி மகிழ சறுக்குமரம், ஊஞ்சல் ஆகியன அமைக்கப்பட்டுள்ளது. மேலும் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், நாகேஷ், ஜெயலலிதா நடித்த சில படங்கள் படப்பிடிப்பு சாத்தனூர் அணையில் நடந்துள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறை திறந்துவிடப்படும் நீரில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 17,645 ஏக்கர் விவசாய நிலங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 6,335 ஏக்கர் விவசாய நிலங்களும் என மொத்தம் 24 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.  



சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்த நிலையில் சாத்தனூர் அணையில் உள்ள ஷட்டர்கள் அமைத்து சுமார் 63 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த ஷட்டர்களை அகற்றிவிட்டு புதியதாக ஷட்டர் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் சாத்தனூர் அணையில் உள்ள ஷட்டர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினார். தற்போது உலக வங்கி நிதி உதவியுடன் சுமார் 45 கோடி மதிப்பீட்டில் அணையில் உள்ள 20 ஷட்டர்கள் புதிதாக அமைக்கும்  பணியை திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.  இந்தப் பணியை மத்திய நீர்வள ஆணைய துணை இயக்குனர்கள் ஆனந்த் பிரகாஷ் கண்டியால்,பிரபாத்குமார் மற்றும் உலக வங்கி அமைப்பை சேர்ந்த வினித் பாட்டியா ஆகியோர் சாத்தனூர் அணை பார்வையிட்டு மராமத்து பணிகளின் விவரம் மற்றும் ஷட்டர் அமைக்கும், பொருட்களின் தன்மைகள் குறித்து கேட்டறிந்தார்.



தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும். புதிதாக அமைக்கப்படும் ஷட்டரின் உறுதித்தன்மை மற்றும் பொருளின் தரம் உள்ளிட்டவை சிறப்பானதாக இருக்க வேண்டும் என தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர். பின்பு அணையில் நடைபெற்றுவரும் அனைத்துப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது தலைமை பொறியாளர் இயக்கம் மற்றும் பராமரிப்பு ராஜேந்திரன், பொதுப்பணித்துறை திட்ட இயக்குனர் ராணி, கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் திருச்சி தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் உடன் இருந்தனர்.