தமிழ்நாடு நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசு மாநிலங்களை அழைத்து நடத்தும் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்திற்கு செல்லவில்லை என்பது செய்தியாக தொடங்கி, விவாதமாக மாறி, விமர்சனமாக வீருகொண்டு எழுந்த நிலையில், அதற்கு எண்ணெய் ஊற்றி திரி கொளுத்துவதுபோல, திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.எஸ்.இளங்கோவனே பேசியது சர்ச்சைகளுக்கு கச்சைக் கட்டியிருக்கிறது.



PTR Vs TKS


இந்நிலையில், ட்விட்டரில் பிடிஆர், டி.கே.எஸ்.இளங்கோவன் பெயரை குறிப்பிடாமல், ’கட்சி பொறுப்பில் இருந்து இரண்டு முறை நீக்கப்பட்ட வயதான முட்டாள்’  என்று பதிவிட்ட பிறகு பிடிஆர் Vs பாஜக என்றிருந்த சண்டை பிடிஆர் Vs டிகேஎஸ் என்று மாறத் தொடங்கியது. பிடிஆருக்கு ஆதரவாக திமுக ஐ.டி-விங்கும், டிகேஎஸ் இளங்கோவன் சொன்ன கருத்து சரியே என்று மற்றொரு தரப்பும் சமூக வலைதளங்களில் களமாடி வருகின்றனர்.


இந்த கருத்து மோதல் என்பது சமூக வளைதளங்களை தாண்டி மூத்த பத்திரிகையாளர்கள் இடையே முரண்பாடான கருத்துகளையும் உருவாக்கியுள்ளது.  குறிப்பாக ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பத்திரிகையாளர் மணி, ஒரு மாநிலத்தின் நிதி அமைச்சராக இருந்துக்கொண்டு, சமூக வலைதளங்களில் அருவருக்கத்தக்க வகையில் கருத்துகளை பதிவிடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது, வேண்டுமென்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுக உறுப்பினராக அவர் என்னவேண்டுமானாலும் பேசட்டும் என்றார்.



மூத்த பத்திரிகையாளர் மணி


ஆனால், இந்த கருத்தில் அப்படியே முரண்பட்டிருக்கும் பத்திரிகையாளர் ஜென்ராமோ, தன்னை பற்றிய ஒரு கருத்துக்கு எதிர் கருத்து சொல்லாமல், ட்வீட் போட்டவரை அடிக்க அடியாளையா அனுப்பிவிட்டார் பிடிஆர் என அவருக்கு ஆதரவாக கொந்தளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், பிடிஆரால் கருத்து காயம் பட்டவர்கள் எல்லாம் ஒன்றுகூடி அவரை காலி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் பேசியிருக்கிறார்.



ஜென்ராம், மூத்த ஊடகவியலாளர்


பத்திரிகையாளர் மணியின் பேட்டி இதற்கு அப்படியே மாறுபட்ட வகையில் இருக்கிறது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தன் மீது வைக்கப்பட்டும் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளக் கூடிய பக்குவம் இல்லாதவராக இருக்கிறார் என்றும், எதிர்கருத்து சொல்லும்போது கூட மூத்திரம், மாட்டுமூளை, மனநலம் சரியில்லாதவர் என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி தான் சார்ந்த கட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் எனவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.


டிகேஎஸ் இளங்கோவன் பேசியது குறித்து கருத்து சொல்லியிருக்கும் பத்திரிகையாளர் ஜென்ராமோ, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒரு ‘லாபி’ செயல்பட்டு வருகிறது என்றும், அவருக்கு எதிராக உட்கட்சியிலேயே சிலர் செயல்பட்டு வரலாம் என்றும் தன்னுடைய கணிப்பை பேசியதுமட்டுமல்லாமல், பிடிஆருக்கு ஆதரவாக தான் நிற்பதாகவும் அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிடிஆருக்கு பண்பாடும் தெரியும், தெருவில் இறங்கி சண்டை செய்யவும் முடியும் என்று பிடிஆரின் விசுவாசியாக மாறி அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.


இப்படி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொதுவெளியில் கடுமையான கருத்துகளை வெளியிட்டு வருவதை ஆதரித்தும், எதிர்த்தும் பல்வேறு தரப்பினர் பேசி வரும் நிலையில், இது குறித்து மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ள நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நான் ஜி.எஸ்.டி கூட்டத்திற்கு போகாததற்கான காரணத்தையும் கூட்டத்தில் சொல்லப்படவேண்டிய அரசின் கருத்துகளை அனுப்பியதையும் முதல்நாளே வெளியே விட்டிருப்பேன். ஆனால், யாருக்கெல்லாம் அறிவில்லை, இப்படி அறிவில்லாமல் பேசுபவர்கள் யார் என்று தெரியட்டும் என்பதற்காகவே இரண்டு, மூன்று நாட்கள் காத்திருந்து இந்த தகவலை வெளியிட்டேன் என சொல்லியிருக்கிறார்.


அதுமட்டுமின்றி, முட்டாள்தனமாக பேசுபவர்களை பார்த்து என்னால் சகித்துக்கொண்டிருக்க முடியாது எனவும், இதை விட அதிகமாக நான் கோபப்படுவேன். ஆனால் எனக்கு நேரமில்லாத காரணத்தினால் மாசத்துல ரெண்டு தடவ இந்த மாதிரி வசமாக மாட்டுபவர்களை வச்சு செய்கிறேன் எனவும் பேசியிருக்கிறார்.


ஆனால், மாநிலத்தின் நிதி நிலையை பற்றி கவலைப்பட வேண்டிய ஒரு நிதி அமைச்சர், கண்ணியத்தை காக்க வேண்டிய ஒரு அரசின் பிரதிநிதி, சமூக வலைதளங்களில் அறிவில்லாதவர்கள் யார் என்பதை தேடுவதையும், கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதையுமே மாநில மக்கள் விரும்புவார்களே தவிர, தன்னுடைய மேதாவிதனத்தை சமூக வலைதளங்களில் காட்டுவதையும், தன்னுடைய பாரம்பரியம், பணம், அறிவு எல்லாம் என்னவென்று தெரியுமா ? நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா என்று காட்டிக்கொள்வதை போல செயல்படும் இதுபோன்ற சம்பவங்களை அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.