ஆன்மீக நகரமான திருவண்ணாமலை அடர்ந்த காடுகளுக்கும், மலைப்பகுதிக்கும் நடுவே அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் சுமார் 10,000 ஹெக்டேர் காப்புக் காட்டுகள் உள்ளது.  இந்த காப்பு காடுகளில் குரங்குகள், லங்கூர் வகை குரங்குகள், மான்கள், காட்டு பன்றிகள், எரும்புத்திண்ணி உள்ளிட்ட வனவிலங்குகளும், பாதுகாக்கப்பட வேண்டிய பறவைகளான மயில், குயில், புறா உள்ளிட்ட பறவைகளின் இருப்பிடமாக திகழ்கின்றன.


 



இங்கு வசிக்கும் குரங்குகள் குழந்தைகள் போல் சேட்டை செய்வது மனதை மகிழ வைக்கும். அழகிய கொம்புகளை கொண்ட கிளைமான்கள் துள்ளி குதித்துச்செல்லும் காட்சி காண்போரை மகிழ்விக்கின்றது. ஆண்டுதோறும்  வெப்பநிலை அதிகரித்து கொண்டே போகிறது. மழைப் பொழிவும் குறைந்துவிட்டது. சிலநேரம் பெய்யவேண்டிய பருவ  மழை பெய்யாமல் பொய்யாக்கி விடுகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் பருவநிலை மாற்றமே. இத்தகைய  பருவநிலை மாற்றம் ஏற்படுவதற்கு காரணம்  மரங்கள் இல்லாததுதான். தட்பவெப்பநிலை மாற்றத்தைச் சரிசெய்ய காடு வளர்ப்பு மிக அவசியம். ஆனால் காட்டுப் பகுதியில் ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் வைத்திருப்பவர்கள் காடுகளை அழித்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் காடுகள் ஆக்கிரமிப்பதாலும், மரங்களை வெட்டுவதாலும் தட்வெப்ப நிலை மாறுகின்றன. வனப்பகுதியை பாதுகாத்திட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


தற்போது கோடைக்காலம் என்பதால் அக்னி வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டன .இதனால் வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. வனப்பகுதியில்  வசிக்கும்  வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவுதேடி வனப்பகுதியிலிருந்து வெளியே வரும்  நிலை ஏற்பட்டுள்ளது.


 



திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள  வனப்பகுதியில் மயில், மான்கள், காட்டுபன்றி, நரி, லங்கூர் இன குரங்குகள் என பல்வேறு வன விலங்குகள், இந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் உள்ள மான்கள், மயில்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வெளியே வரும் மான்கள், மயில்கள் வாகனங்களில் அடிபட்டும் நாய்களிடம் சிக்கியும் பரிதாபமாக உயிரிழக்கும் அவலநிலை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது .


ABP NADU-இல் இருந்து இதைபற்றி வனச்சரக அலுவலர்  மனோகரிடம் கேட்டபோது,


”திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியிலும்,கவுத்திமலை வனபகுதியிலும் 15 செயற்கையான குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த குட்டைகளில் கோடைகாலமான பிப்ரவரி முதல் ஜுலை மாதம் வரை வனவிலங்குகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை  போக்க டேங்கர் லாரிகள் மூலம் 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி தன்னார்வலர் தேவேந்திரன்( 50) என்பவர் சைக்கிளில் குடங்களில் தண்ணீர் எடுத்துச்சென்று கிரிவல பாதையுள்ள தண்ணீர் தொட்டிகளில் நிரப்புகிறார்” என்றார்


 



”இதனைத்தொடர்ந்து மலையை சுற்றி உள்ள வனப்பகுதியில் 40 குளங்கள் அமைத்துள்ளோம். மழை பொழியும் நேரங்களில் மலையின் மண் அரிப்பை தடுக்கும் விதமாக ஓடைகளில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை குளங்களில் தேங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் குடிப்பதற்கு நீரை சேமித்து வைக்கிறோம். மாவட்டம் முழுவதும் பல லட்ச மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறோம். தன்னார்வலர்களும் மாவட்ட நிர்வகத்துடன் அனுமதி பெற்று மரக்கன்றுகள் நடலாம். கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் மான்கள், மயில்கள் சாலைப்பகுயில் வாகனங்களில் அடிபட்டும் நாய்களிடம் சிக்கியும் இறந்து விடுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் இதனைக் கருத்தில் கொண்டு கிரிவலப்பாதை, மலையை சுற்றியும் கம்பி வேலிகள் அமைத்தால் வன விலங்குகள் இறக்காதவண்ணம் தடுக்கலாம். தற்சமயம் வன விலங்குகள் உயிர் சேதங்கள் ஏற்படாதவகையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகிறோம்” என தெரிவித்தார்.