சாதிய ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சமத்துவம் பிறக்க வேண்டும் என கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பெரியார் சமத்துவபுரம். வீடற்ற ஏழை, எளிய மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் ஒற்றுமையாக வாழவேண்டும் என தமிழகம் முழுவதும் சமத்துவபுரம் அமைத்தார் கலைஞர். இந்த திட்டம் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக நிறைவேறியது. ஆனால் சில இடங்களில் திட்டம் நிறைவேற்றப்பட்டு திறக்கப்படாமலேயே மூடுவிழா கண்டது. அதில் ஒன்று தான் கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 'பெரியார் சமத்துவபுரம்'. தி.மு.க ஆட்சி காலத்தில் திறக்கும் தருவாயில் இருந்து போது ஆட்சி மாற்றத்தால் திறக்கமுடியாமல் போனதால் இப்போது வரை அப்படியே இருக்கிறது.
10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்துள்ள சூழலில் தொகுதி எம்.எல்.ஏ.வும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் இந்த பெரியார் சமத்துவபுரத்தை திறக்க ஏற்பாடு செய்துவருவதாக தகவல் பரவிவருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணமங்கலப்பட்டி ஊராட்சியில் சுமார் 2 கோடி மதிப்பில் பெரியார் சமத்துவபுரம் திட்டம் கொண்டுவரப்பட்டது. 10 ஏக்கர் நிலம் வனத்துறையிடம் இருந்து பெறப்பட்டு காலி இடங்கள் போக சுமார் 6 ஏக்கரில் நூறு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. பல்வேறு வசதிகளுடன் கூடிய இந்த திட்டம் 2010 -லேயே 80% முடிக்கப்பட்டது.
அதற்கு பின் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு இந்த திட்டத்தை கைவிட்டது. பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு 2011-ம் ஆண்டே மற்ற பணிகளும் நிறைவு பெற்று திறப்பு விழாவிற்கு தயாராகியது. வீடுகள் ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்டு திறக்கப்படாமல் மீண்டும் பூட்டு போடப்பட்டது. வீடற்ற ஏழை, எளிய மக்கள் பலரும் குரல் கொடுத்தும் இந்த சமத்துவபுரம் ஆடு மேய்க்கும் இடமாகவும். கம்பு, கேழ்வரகு, கடலை போன்றவை காயவைக்கும் இடமாகவும். சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி கருவேல் மரங்கள் நிறைந்த புதராக மாறியிருந்தது.
இங்கு பல வீடுகள் சேதமடைந்தும், கதவுகள் உடைக்கப்பட்டும், மின் கம்பிகள் அறுந்த நிலையிலும் கிடந்தன. ஆங்காங்கே மது புட்டிகள் உடைத்து வீசப்பட்டும் இருந்தன. இராட்சத தண்ணீர் டேங்கில் சொட்டு தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடந்தது. அரசு அலுவலகமா மாற்ற ஆருடம் செய்யப்பட்ட கட்டிடங்கள் அவலம் நிறைந்து காணப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த சமத்துவபுரம் தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் திறக்கப்படலாம் என தகவல் பரவியது. இது குறித்து தெரிந்து கொள்ள அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் பேசினோம். "பெரியார் சமத்துவரம் திறக்க போர்கால அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அங்கு கட்டிடங்கள் பல சேதமடைந்துள்ளது. முட்புதர்களை அகற்றி, மராமத்து பணிகள் செய்யவேண்டும். முன்னதாக அதற்கான எஸ்டிமேட் போட்டு, உத்தரவு பெற்று விரைவாக செயல்படுத்தப்படும்" என்றார்.
மேலும் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளஅதிகாரிகள் சிலர் "இந்த சமத்துவபுரம் அரசு முயற்சி எடுத்து தான் செயல்படுத்த முடியும். இந்த சமத்துவபுரத்தை திறக்க பொதுமக்களிடம் முதல்வர் உறுதியளித்ததால் கண்டிப்பாக திறக்க வாய்ப்புள்ளது. அதற்கு முன்னதாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சமத்துவபுரத்தில் ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது, அதனால் முதல்கட்டமாக சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளோம். விரைவில் திறப்பது குறித்து ஏற்பாடுகள் நடைபெறும் போது தகவல் தருகிறோம்" என்றார்கள்.
இது குறித்து சிங்கம்புணரியை சேர்ந்த பொதுமக்கள்,” சிங்கம்புணரியில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தின் தற்போதைய நிலை வயிற்றில் புளியை கரைக்கும். அந்த அளவுக்கு அதன் நிலை மோசமாகிவிட்டது. தொகுதியில் தி.மு.க எம்.எல்.ஏ இருந்தாலும் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. தற்போது தி.மு.க ஆட்சி என்பதால் இதனை சரி செய்து கண்டிப்பாக திறக்க முடியும். இதனை அசால்டாக விட்டுவிடாமல் அமைச்சர் பெரியகருப்பன் சூட்டோடு சூடாக சமத்துவபுரத்தை திறந்துவைக்க வேண்டும். இதனால் வீடற்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள்” என்றார்.
படம் - ம. அரவிந்த்