நகர பகுதிகள் மற்றும் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் வேகமாக பரவி வந்த  கொரோனா நோய் தொற்று, கிராமங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. கிராமங்களுக்கு பரவுதலை தவிர்க்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் வலியுறுத்தி இருந்தார். அதே போல் கிராமங்களுக்கும் கொரோனா பரவல் தொடங்கி விட்டது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

  


 



கொரோனா அறிகுறிகளோடு மருத்துவமனைகளுக்கு வருவோரின் விகிதம் சமீப நாட்களாக அதிகரித்துள்ளதாக மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவ பணியாளர்கள்  சளி,காய்ச்சல் உடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறுகின்றனர். கோவிட் பரிசோதனை முடிவுகள் வர 4 அல்லது 5 நாட்கள் ஆகின்றன என்பதால் பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளதாகவும் தெரிகிறது அல்லது அதற்குள் நோய்த் தொற்றாளர்கள் இறந்து விடுகின்றனர். நோய்த் தொற்றுள்ள பலரும் பரிசோதனை செய்யாமலும், தற்காலிக சிகிச்சைகளை மேற்கொண்டும் பலனில்லாமல் இறந்து போய் விடுகின்றனர் என வேதனை தெரிவிக்கிறார் செவிலியர் ஒருவர். இவை எதுவும் கொரோனா இறப்பு கணக்கில் கொண்டு வரப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. 



மாவட்ட மருத்துவமனைகளில் இடமின்மை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு பற்றிய செய்திகள், தனியார்‌ மருத்துவ மனை சிகிச்சையில் கட்டணக் கொள்ளை போன்றவை, கிராமப்புற நோய்த் தொற்றாளர்களை சிகிச்சைக்காக நகரங்களுக்குச் செல்லவிடாமல் தடுத்து விடுகின்றன. இதன்  காரணமாக, நோய்த் தொற்றுக்கு உள்ளான விவசாயிகள் கிராமங்களிலேயே முடங்குகின்றனர். உள்ளூர் மருத்துவர்கள், ஊசி  மாத்திரைகள் என நாட்களை கடத்துகின்றனர்; நோய்த் தொற்று அதிகரித்த போதும் கூட, முகக் கவசம் தனிமைப்படுத்திக் கொள்தல் போன்ற நோய்த் தடுப்பு புரிதல் இல்லாததால் பிற கிராமப்புற மக்களுக்கும் நோயை பரப்புகின்றனர் என ஆதங்கம் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். 



கிராமப்புற நோய்த் தொற்றாளர்களுக்கு சிகிச்சை என்ற மொத்தப் பிரச்சினையும் ஒரு சுகாதார பணியாளர் Sanitary inspector தலையில் சுமத்தப்பட்டுள்ளது;  "வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்" என்ற ஆலோசனைக்கு மேல் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. கிராமப்புற நோய்த் தொற்றாளர்களை கண்டறிந்து சிகிச்சை கொடுப்பதற்கு [ Test - Track - Treat ] போதிய மருத்துவ  கட்டமைப்பும் இல்லை. இந்த நிலை நீடித்தால் கிராமங்கள் பேரிழப்புகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் கிராமங்களில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சமூக ஆர்வலர்கள் .



கிராமப்புறங்களில் தற்பொழுது வேகமாய் பரவி வரும் கொரோனா  நோய் தொற்று மற்றும் அதன் மூலம் நிகழும் மரணங்களை தடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் மாநில பொது செயலாளர் சந்திர மோகன் கோரிக்கை வைத்துள்ளார் .


இது தொடர்பாக ABP செய்தி குழுமத்திடம் பேசிய சந்திரா மோகன் “அனைத்து ஊராட்சிகளிலும் கோவிட் நலமய்யம் உடனே  அமைக்க வேண்டும். இங்கு பரிசோதனை, தடுப்பூசி, தனிமைப்படுத்தும் வார்டுகள் போன்றவை இருக்கவேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரண வசதிகளோடு ஆம்புலன்ஸ் வசதியும் இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் - PHC, போதுமான ஆக்சிஜன் படுக்கைகள், கூடுதல் எண்ணிக்கையிலான தகுதியான மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்டதாக மேம்படுத்தப்பட வேண்டும். அந்தந்த ஊராட்சிகளில் உள்ள படித்த இளைஞர்களைக் கொண்டு "கோவிட் சுகாதாரப் பணியாளர்கள்" என்ற புதியப் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவர்களை நிர்வாகப் பணிக்கான உதவியாளர்களாக பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார். 



மேலும் “தாலுகா தலைமையிடங்களில்  தீவிர சிகிச்சைப் பிரிவு (அய்சியூ) படுக்கைகள் கொண்ட சமுதாய சுகாதார மய்யங்கள், 24 ×7 அவசர சிகிச்சை வசதிகள் கொண்ட மேல்சிகிச்சை தற்காலிக  மருத்துவமனைகள் உடனடியாக நிறுவப்பட வேண்டும். இது கிராமப்புற மக்களின் வாழ்வா, சாவா என்றப் பிரச்சினை ஆகும். போர்க்கால அடிப்படையில், மாவட்ட ஆட்சியர், தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரிகள் வாயிலாக, கிராமப்புற நோய்த் தொற்று, இறப்புகள் பற்றிய  ஆய்வறிக்கைகளை பெற்றுக் கொண்டு தமிழக அரசாங்கம் விரைந்து செயல்பட வேண்டும்.


தமிழக அரசாங்கம்  நிதிநெருக்கடி குறித்து தயங்காமல், மேற்கூறிய கோரிக்கைகளை பரிசீலனை செய்தால் ஒழிய தினமும் கொத்து கொத்தாய் இறக்கும் அப்பாவி கிராமப்புற விவசாயிகளையும் தின கூலிகளையும் இந்த கொடிய கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற முடியாது” என்ற கோரிக்கையை சந்திரா மோகன் தமிழக அரசுக்கு வைத்துள்ளார்.