தமிழர்களின் வரலாறு  பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாகும். தமிழர்களின்  வரலாற்றுச் சிறப்புகள் ஒவ்வொன்றும் வியப்பை ஏற்படுத்தக் கூடியவையே . தமிழகத்தில் பரவலாக கண்டறியப்படும் தொன்மைவாய்ந்த வரலாற்றுக் குறிப்புகளும், சின்னங்களும் உலகிற்குப் பழங்காலத்தில் வாழ்ந்த நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றன. அதில் தொன்மைவாய்ந்த வரலாற்று நடுகற்கள் வழிபாடும் முக்கியமானவை. அதனை ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறுகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை ஜவ்வாது மலைப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டபொழுது ஆவணம் செய்யப்படாத, ஆயிரம் வருடங்கள் பழமையான நடுகல் ஒன்றை கண்டறிந்துள்ளனர். 


இது தொடர்பாக மரபு சார் அமைப்பு தலைவர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம். “நாங்கள்  திருவண்ணாமலையில் இருந்து நடு கற்களை ஆராய்வதற்கு தேடி பயணத்தை தொடங்கினோம். அப்போது எங்களுடைய தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் செங்கத்தில் இருந்து பரமனந்தல் வழியாக ஜமுனாமரத்தூர் செல்லும் வழியில் மேல்பட்டு ஊரை சேர்ந்த முனைவர் திரு. கமலக்கண்ணன் அவர்கள் எங்களிடம் பாலமத்தூர் காப்பு காட்டில் நடுகல் ஒன்று உள்ளது என்ற அவர் கூறிய தகவலின்பேரில் நாங்கள் எங்களுடைய பயணத்தை தென்மலையில் உள்ள காப்புக்காட்டுக்குள் இருக்கும் நடுகல்லை தேடி செலுத்தினோம்.


 




பரமனந்தல் மேல்பட்டு இடையே உள்ள தென்மலை பலாமரத்தூர் காப்புக்காட்டுக்குள் வலதுபுறமாகப் பிரியும் ஒற்றையடிப் பாதையில் வனத்துக்குள் சுமார் 2 கி.மீ பயணித்தபொழுது செல்லும் வழியில் இயற்கை எழில் சூழலும், சுத்தமான காற்றும், பேரமைதியான சூழலும் நிறைந்திருந்தன. ஒரு மரத்தின் கீழ் நடுகல் ஒன்று இருப்பதைக் கண்டோம். நாங்கள் எடுத்துச்சென்ற பைகளை கீழே வைத்து விட்டு முதலில் தண்ணீர் அருந்தி விட்டு எங்களின் பணிகளைத் துவங்கினோம். ஆய்வு செய்தபொழுது அந்நடுகல் புலியுடன் போரிட்டு மரணம் அடைந்த வீரனுக்காக வைக்கப்பட்ட நடுகல் என்பதைக் கண்டறிந்தோம்.


அந்த நடுகல் சுமார் 3 அடி அகலமும் , 4 அடி உயரமும் கொண்ட பலகைக் கல்லில் இடதுபுறம் வீரன் ஒருவன் தனது இடது கையில் வில்லையும், அம்பையும் தாங்கிக்கொண்டு, வலது கையில் குறுவாளை உருவி உயர்த்தியவாறு பிடித்துக்கொண்டு, ஆக்ரோஷமாகச் சண்டையிடும் காட்சி புடைப்பாக செதுக்கப்பட்டிருந்தது. இவ்வீரனின் தலையில் கொண்டை பின்புறமாகவும் கழுத்தில் அணிகலனாக சவடி, இரு கைகளில் தோல் வளையும் அணிந்து இடையில் உடுத்தப்பட்டுள்ள ஆடை தொடை வரை நீண்டு தனது இடது காலை முன்வைத்துப் போரிடச் செல்வது போல காணப்பட்டது. வீரனின் வலது புறம் புலி ஒன்று ஆக்ரோஷமாக கொண்டு இருந்தது. 



அதன் மீது அம்பு தைத்தது போல் காட்டப்படவில்லை. எனவே இப்புலியை எதிர்த்துப் போரிட்டபொழுது இவ்வீரன் மரணம் அடைந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. ஊரில் உள்ள ஆநிரைகளையோ (ஆடு, மாடு), மக்களையோ தாக்கும் புலியை எதிர்த்துச் சண்டையிட்டு உயிரை விடும் வீரரை நடுகல் எடுத்து வழிபடும் வழக்கம் பல்லவர் காலம் தொட்டே வழக்கில் உள்ளது. புலிகுத்திபட்டான் கல் என்று பதம் உள்ளது. இவ்வகையான நடுகற்கல்களை, இவ்விடத்தில் புலியிடம் இருந்து ஊர்மக்களையோ  காக்கும் பொருட்டு சண்டையிட்டபொழுது உயிரிழந்த இந்த வீரனுக்கு இவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் நடுகல் எடுத்து வழிபாடு செய்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது



இந்நடுகல்லில் காட்டப்பட்டுள்ள வீரனின் தோற்றம் மற்றும் சிற்பத்தை வைத்து இது 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்திய நடுகல்லாகக் கருதலாம். ஊர் மக்கள் இந்நடுகல்லை "மோர்புட்டான்" கல் என்ற பெயரில் வழிபாடு செய்து வருகின்றனர். நேர்த்திக்கடன் உள்ளவர்கள் வைகாசி மாதம் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர் . மலையில் வாழும் மக்களில் "மோர்பட்டான்" என்ற ஒரு தலம் இருப்பதாகவும், அக்குலம் முற்காலத்தில் காவல் காக்கும் பொறுப்புகளில் ஈடுபட்டதாகவும்,  இதன்மூலம் இந்த நடுகல் வீரனும் ஊரைக்காக்கும் பொருட்டு உயிர் விட்டு இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.


ஜவ்வாறு மலைத்தொடரில் புலிகள் இருந்தமைக்கான சான்றாக கோவிலூர் நடுகல்லைத் தாண்டி நமக்குக் கிடைத்துள்ள மேலும் ஒரு சான்று இந்த நடுகல் என கூறினார்