Vijayakanth Health Condition Now:


தே.மு.தி.க. கட்சியை நிறுவி அதன் தலைவராக பொறுப்பு வகிப்பவர் நடிகர் விஜயகாந்த். 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தவர். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 30-ந் தேதி விஜயகாந்த் தனது உடல்நல பரிசோதனைக்காக துபாய் புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது இளைய மகனும் நடிகருமான சண்முகபாண்டியனும் உடன் சென்றுள்ளார்.




இந்த நிலையில், நடிகர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளேன். நான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம் என்று  பதிவிட்டுள்ளார்.






இந்த புகைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் டீ சர்ட் மற்றும் பேண்ட் அணிந்து கருப்பு கண்ணாடி அணிந்து அமர்ந்துள்ளார். அவரது இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தால் அவரது ரசிகர்களும், தே.மு.தி.க. தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். 


முன்னதாக, விஜயகாந்த் தனது மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அவர் அமெரிக்கா செல்லவில்லை. அதற்கு பதிலாக அவர் துபாய் புறப்பட்டு சென்றார். விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கவிருந்த அமெரிக்க மருத்துவர் துபாய் வந்துள்ள காரணத்தால், துபாயிலே அவரிடம் சிகிச்சை பெறுவதற்காக விஜயகாந்த் தனது மகனுடன் துபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




துபாய் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த விஜயகாந்த்தை சக்கர நாற்காலியில் அமரவைத்து அழைத்துச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது. திரைப்படங்களில் கம்பீரமாக சண்டையிட்டும், வசனம் பேசியும் நடித்த விஜயகாந்த் சக்கர நாற்காலியில் அமர்ந்து சென்ற காட்சியை பார்த்த அவரது ரசிகர்களும், தொண்டர்களும் சமூக வலைதளங்களிலே தங்களது வேதனைகளை பகிர்ந்தனர்.


இந்த நிலையில், விஜயகாந்த் தற்போது மிகவும் ஆரோக்கியமான உடல்நலத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்களுக்கும், தே.மு.தி.க. தொண்டர்களுக்கும் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலம் மிகவும் நலிவடைந்த காரணத்தால் விஜயகாந்த் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியை அமைத்து போட்டியிட்டார். கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் கூட பிரச்சாரத்திற்கு வந்த விஜயகாந்த், பரப்புரையில் ஈடுபடாமல் வேனில் அமர்ந்தபடியே கையை அசைத்துவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தாம்பரம் : நைட் ட்ரைவ்.. கோர விபத்தில் ஐந்து பொறியாளர்கள் உயிரிழப்பு..!