தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் குறைந்த எண்ணிக்கையில் பதிவானதால் மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டு, அரசு விதிமுறைகளின்படி 1.09.2021 முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு மாணவர்கள் வரவேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து மாணவர்கள் மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை தந்து வருகின்றனர்.


மாவட்டத்தில் மொத்தம் 1,600 பள்ளிகள் உள்ளன. இதில் 545 பள்ளிகள் திறக்கப்பட்டன . இதில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 741 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்கள் சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு 50 சதவீத மாணவா்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 



மேலும், அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, வகுப்பறைகளில் மாணவர்கள் இடையே போதிய இடைவெளியுடன் அமர வைப்பது, மதிய உணவுநேரத்தில் கூட்டாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்ப்பது என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் 42 வயது ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 2-ஆம் தேதி முதல் லேசான காய்ச்சல் இருந்தது. அவர், சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது, அங்கு சந்தேகத்தின் பேரில் ஆசிரியருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், பரிசோதனையின் முடிவு  வெளியானதில் ஆசிரியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.



இதையடுத்து ஆசிரியரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வட்டார மருத்துவ அலுவலர் கவுதம் ராம் தலைமையில் டாக்டர் மதுமிதா மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று, தொற்று கண்டறியப்பட்ட ஆசிரியருடன் தொடர்பில் இருந்த 30 மாணவர்கள், 20 ஆசிரியர்கள் என 50 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.


அவர்களுடைய சோதனை மாதிரிகளை சேகரித்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவில் தான் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது தெரியவரும்.பின்னர் பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பள்ளியை யாரும் பயன்படுத்த வகையில் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட 4 நாட்களிலேயே ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.