கன்னியாகுமரி மாவட்டத்தில் வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் ஆகிய மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடமாக குமரி கடல் விளங்குகிறது. கடற்கரையிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. மேலும், அதன் அருகே 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
முக்கடல் சங்கமம்:
முக்கடல் சந்திக்கும் கன்னியாகுமரிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், திருவள்ளூர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்று பார்வையிட்டு வருவர். சிலர், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்வதற்கு என்றே கன்னியாகுமரி வருவர்.
திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்வதற்கு படகு போக்குவரத்து இயக்கப்படுகின்றன. கடல் சீற்றம், சூறைக்காற்று போன்ற நேரங்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தம் செய்யப்படுகிறது. இச்சூழல் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் ஏமாற்றமளிக்கும் சம்பவமாக அமைகிறது.
கண்ணாடி பாலம்:
இந்நிலையில், சுற்றுலா பயணிகளுகளின் வசதிகளுக்காக, விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி இழையினாலான கூண்டு பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
இந்த கண்ணாடி பாலமானது 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது பக்கவாட்டிலும், நடைபாதையின் கீழேயும் கண்ணாடி வழியாக கடல் அலையை ரசிக்கும் வகையில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே கடலின் மேல், பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இதுகுறித்து ஐஐடியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறிய அமைச்சர், பாம்பன் பாலம் கட்டியது போல் நல்ல தரத்துடன் ரூ.37 கோடி மதிப்பீட்டில் கடல்சார் பாலம் அமைக்கப்படும் என்றும், பூம்புகார் நகரமும் சீரமைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.